UPDATED : ஜூலை 25, 2009 12:00 AM
ADDED : ஜூலை 25, 2009 10:04 AM
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலாளர் பேராசிரியர் ரைமன்ட் உத்தரியராஜ் பங்கேற்று விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளும், அதற்கு பேராசிரியர் ரைமன்ட் உத்தரியராஜ் வழங்கிய பதில்களும்:
162.25 கட்-ஆப் எடுத்துள்ளேன். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளேன். கோவையில் உள்ள கல்லூரியிலேயே சேர விரும்புகிறேன். கல்லூரியை தேர்வு செய்ய உங்களது ஆலோசனை?
-சரண்யா, உடுமலை
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் காலியிடங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) தினமும் 6 முறை அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. கவுன்சிலிங்கின் அன்றைய இறுதி காலியிட நிலவரமும், தினமும் இரவு 7.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இவற்றில் உங்களுக்கு பிடித்த பிரிவில் காலியிடம் உள்ள அதேசமயம், உங்களது மதிப்பெண்ணுக்கு இடம்கிடைக்க வாய்ப்புள்ள கல்லூரிகளை பட்டியலிடுங்கள். அந்தக் கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளை நேரில் சென்று பாருங்கள். அதன்மூலம், உங்களுக்கு பிடித்த கல்லூரியை தேர்வு செய்யலாம். கடந்த ஆண்டு எந்த கல்லூரியில், எத்தனை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்தது என்ற விவரமும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விவரமும் கல்லூரிகளை பட்டியலிடுவதற்கு உங்களுக்கு உதவலாம்.
டெக்ஸ்டைல் பிரிவில் டிப்ளமோ படித்துள்ளேன். லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாமாண்டு பி.இ., சேர விண்ணப்பித்தேன். அதில் இடம்கிடைக்க வில்லை. பி.டெக்., டெக்ஸ்டைல் படிப்பிலும் இடம் கிடைக்கவில்லை. என்ன செய்வது?
-சங்கமித்ரா, கோவை
டிப்ளமோ படிப்பிற்கு பிறகு டிகிரி படிப்பதே சிறந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பி.இ., படிப்பு வழங்கப்படுகிறது. இதில் டிப்ளமோ படித்தவர்கள் சேரலாம். இதற்கு இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
எனது கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு ஜூலை 30ம் தேதி கவுன்சிலிங் நடைபெற உள்ளதை இணையதளத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆனால், இதுவரை அழைப்புக் கடிதம் வரவில்லை. நான் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாமா?
-பாண்டிசெல்வம், விழுப்புரம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு முறையாக விண்ணப்பித்து தகுதி பெற்றவர்களின் பெயர், தரவரிசை பட்டியலில் (ரேங்க் லிஸ்ட்) இடம்பெற்றிருக்கும். அதில் உங்களது பெயர் இடம்பெற்றிருந்தால் நீங்கள் தாராளமாக கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம். உங்களுக்குரிய கவுன்சிலிங் நேரத்திற்கு இரண்டு மணிநேரம் முன்பாகவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வாருங்கள். பல்கலைவளாகத்தில் உள்ள கவுன்சிலிங் விசாரணை அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களைக் காண்பித்தால் மாற்று அழைப்புக் கடிதம் வழங்கப்படும். அதனைக்கொண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்று, உங்களுக்குரிய கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்துகொள்ளலாம்.
தொழிற்கல்வி பிரிவைச் சேர்ந்த எனது சகோதரர் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளார். முதற்கட்ட கவுன்சிலிங்கில் அவர் அழைக்கப்படவில்லை. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் எப்போது? அதில் பங்கேற்க முடியுமா?
-ஸ்டீபன், திண்டுக்கல்
தொழிற்கல்வி பாடப்பிரிவு (வொகேஷனல்) மாணவர்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் ஏறத்தாழ ஆயிரத்து 200 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 31, ஆகஸ்ட் 1, 2, 3 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கு விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும், உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் கவன்சிலிங் விசாரணை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் எனது மகன் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளான். இதற்கு கட்-ஆப் மதிப்பெண்ணில் கூடுதலாக சேர்க்கப்படுமா?
-தனபால், விழுப்புரம்
சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதற்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் நிரப்பப்படும். விளையாட்டு வீரர்களுக்கு என கட்-ஆப் மதிப்பெண்களில் சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்கு விதிகளில் இடம் இல்லை. விளையாட்டு வீரர் இடஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. தற்போது நடைபெறுவது அகடமிக் கவுன்சிலிங்.
விண்ணப்பத்துடன் வழங்கப்பட்ட விளக்க உரையில் கொடுக்கப்பட்ட தகவல்களில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளில் வசூலிக்கப்படும் விடுதி கட்டண விபரமும் இடம்பெற்றுள்ளது. ஆனால், நான் சேர்ந்துள்ள கல்லூரியில், அதைவிட அதிக கட்டணம் கேட்கிறார்கள்?
-சவுமியா, திண்டிவனம்
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமே கேட்டு தெளிவு பெறலாம். ஏதாவது விதிமீறல் இருந்தால், தமிழக அரசு அமைத்துள்ள கண்காணிப்பு குழுவிடம் புகார் செய்யலாம்.
148.75 கட்-ஆப் பெற்றுள்ளேன். சென்னையில் ஏதாவது ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்குமா? கவுன்சிலிங்கிற்கு வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டுமா?
-ஹரி பிரசாத், சிதம்பரம்
சென்னையில் உள்ள ஏதாவது ஒரு கல்லூரியில் இடம் கிடைக்குமா என்றால், கண்டிப்பாக கிடைக்கும். ஆனால், எந்த கல்லூரியில் கிடைக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. இருக்கும் கல்லூரிகளில் நல்ல கல்லூரியில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது நல்லது. கடந்தாண்டில் உங்களது கட்-ஆப் மதிப்பெண்படி, எந்த மாதிரியான கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என்பதை ஒப்பிடுவதன்மூலம் ஓரளவு கணிக்க முடியும். கடந்தாண்டு விபரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகிய ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். பிற மாநிலங்களில் படித்த தமிழக மாணவர்களுக்கு ‘நேட்டிவிட்டி சர்டிபிகேட்’ அவசியம்.
தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த நான், பொதுப் பிரிவில் உள்ள காலியிடங்களில் இருந்தும் தேர்வு செய்ய முடியுமா?
-குமார், கோவை
ஒரு தனிப்பிட்ட பிரிவினை சேர்ந்தவர்கள் பொதுப் பிரிவுகளில் இருந்தும் இடங்களை தேர்வு செய்யலாம். ஆனால், ஒரு பிரிவைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு, மற்றொரு பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் இருந்து தேர்வு செய்ய இயலாது.
எனது மகன் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் பணிபுரிய வேண்டும் என்று விரும்புகிறான். மெக்கானிக்கல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்துவிட்டு, பிறகு முதுநிலை பட்டப்படிப்பில் அதுசார்ந்த படிப்புகளை தேர்வு செய்துகொள்ளலாமா?
-ஸ்ரீபாலாஜி, திருப்பூர்
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் தான் பணிபுரியவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், இளநிலை பட்டப்படிப்பிலேயே ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். மெக்கானிக்கல் போன்ற ‘கோர்’ இன்ஜினியரிங் படிப்புகளில் இளநிலை பட்டம் படித்தால், பல்வேறு துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது.
கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து விரிவாக கூறுமுடியுமா?
-அருண்மொழி, பழனி
உரிய ஆவணங்களுடன் கவுன்சிலிங் நடைபெறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே வரவேண்டும். முன்பணமாக செலுத்த வேண்டிய, 5 ஆயிரம் ரூபாயை (ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஆயிரம் ரூபாய்) பணமாக கொண்டுவந்தால், கவுன்சிலிங் நடைபெறும் வளாகத்தில் உள்ள வங்கி கவுன்டரில் செலுத்தி கவுன்சிலிங் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். டி.டி.யாக கொண்டுவந்தாலும், வங்கி கவுன்டரில் கொடுத்து கவுன்சிலிங் படிவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும். கவுன்சிலிங் காலியிட நிலவரத்தை அங்குள்ள அரங்கில் உள்ள திரையில் பார்த்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலிங் துவங்கும் நேரத்தையொட்டி, மாணவர்கள் தங்களுடன் பெற்றோர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு, கவுன்சிலிங் அரங்கிற்கு செல்ல வேண்டும். முதலில் மாணவரது வருகை பதிவு செய்யப்படும். பிறகு, அங்குள்ள அரங்கில் மாணவரும், உடன் வரும் பெற்றோரும் அமர வைக்கப்படுவர். கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து அங்கு விளக்கப்படும். பின்னர், மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். சரிபார்க்கப்பட்டு மற்றொரு அரங்கில் அமரவைக்கப்படுவார்கள். இந்த இரண்டு அரங்குகளிலும் உள்ள திரைகளில் பார்த்து காலியிட நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். ரேங்க் வரிசைப்படி மாணவர்கள் அழைக்கப்படும்போது ‘கவுன்சிலிங் டெர்மினல்’ பகுதிக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளில் இடம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு, இருக்கின்ற காலியிடங்களில் பிடித்தமான கல்லுரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்யவேண்டும். அதற்கு போதிய நேரம் வழங்கப்படும். எனவே, மாணவர்கள் பதட்டப்பட வேண்டாம். இறுதியாக கல்லூரியையும், படிப்பையும் தேர்வு செய்த பிறகு அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு கொடுக்கவேண்டும். பின்னர், மாடி அறையில் மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்து அதற்கான ஆணை பெற்றபிறகு, கல்லூரியையோ, பாடப்பிரிவையோ மாற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அட்மிசன் ஆணையை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது, மருத்துவ பரிசோதனைக்கான படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழை பெற வேண்டும்.
சப்ளிமன்ட்ரி கவுன்சிலிங் எப்போது நடக்கும்? ஏற்கனவே வாங்கிய விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்திக்கொள்ளலாமா?
- குலோரி, சென்னை
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு அடுத்த நாள் 11ம் தேதியே சப்ளிமன்ட்ரி கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும். ஏற்கனவே வாங்கிய விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கவுன்சிலிங்கிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சென்னையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
