தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி முறைகேடுகளை தடுக்க தனி சட்டம்: மத்திய அரசு திட்டம்

கல்வி முறைகேடுகளை தடுக்க தனி சட்டம்: மத்திய அரசு திட்டம்

கல்வி முறைகேடுகளை தடுக்க தனி சட்டம்: மத்திய அரசு திட்டம்


UPDATED : ஜூலை 28, 2009 12:00 AM

ADDED : ஜூலை 28, 2009 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2009 12:00 AM ADDED : ஜூலை 28, 2009 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாடு முழுவதும் கல்வி மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும், அச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும் புது சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டில்லியில் நடந்த மாநில உயர்கல்வித் துறை செயலர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் தேர்வில் அரசியல் தலையீட்டை தடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை செயலர்களின் கூட்டம், டில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. கல்வி மையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும், அத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும் மத்திய அரசு இயற்றவுள்ள புது சட்டம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இப்புது சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் வரவேற்றுள்ளன.
கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு நெட்/ஸ்லெட் தேர்ச்சி அல்லது பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும் என்ற யு.ஜி.சி.,யின் புது விதிமுறை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்விதிமுறை கொண்டுவரும் முன் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் தொடர்பாக சட்டப் பிரச்னைகள் எழும் என பல மாநில அரசுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது:
அனைத்து மாநில அரசுகளும் 2020ம் ஆண்டில் உயர்கல்வியை எப்படி எடுத்துச் செல்லப் போகிறோம் என்ற எதிர்கால திட்ட அறிக்கையை உருவாக்க வேண்டும். அதில், மாநிலத்தில் தற்போதுள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை, அவற்றின் தரம், உயர்கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கான வழிமுறைகள் ஆகியவை இடம்பெற வேண்டும்.
கடந்த 2000-01ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.53 சதவீதமாக இருந்த உயர்கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, தற்போது 0.91 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் மாநில அரசின் கல்வி ஒதுக்கீடு, 3.76 சதவீதத்திலிருந்து 2.73 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு கபில் சிபல் பேசினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் புரந்தரேஸ்வரி, “தனியார் கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணத்தை கட்டுப்படுத்துவது, துணைவேந்தர்கள் தேர்வில் அரசியல் தலையீட்டை தடுப்பது குறித்து மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு எதிர்பார்க்கிறது,” என தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறை செயலர் கணேசன் கூறுகையில், “தமிழக அரசின் 92ம் ஆண்டு நன்கொடை தடுப்புச் சட்டத்தைப் போல தேசிய அளவில் கல்வி மையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு புது சட்டம் இயற்றவுள்ளது. “இதுகுறித்து மாநில அரசுகளின் கருத்து கேட்கப்பட்டது. யஷ்பால் கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us