மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் போராடும் ஏழை மாணவர்
மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் போராடும் ஏழை மாணவர்
UPDATED : ஜூலை 28, 2009 12:00 AM
ADDED : ஜூலை 28, 2009 12:24 PM
கோவை: தாயாரின் உழைப்பால் பட்டப் படிப்பு படித்த ஏழை மாணவர் ஒருவர், தாயார் இறந்ததால் பட்ட மேற்படிப்பு படிக்க பணம் இன்றி தவிக்கிறார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சங்கிலி வீதியைச் சேர்ந்தவர் தியாகு(21). இவரது தந்தை சிவலிங்கம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு போய் விட்டார். தாய் ஜகன்மாதா(40) மற்றும் தங்கை ஸ்ரீபிரியா(15). உடுமலையில் அரசு உதவி பெறும் எஸ்.கே.பி., பள்ளியில் படித்தார்.
தியாகுவின் அம்மா, காய்கறி வியாபாரம் செய்து படிக்க வைத்தார். தியாகு நன்றாக படிப்பதை பார்த்து, பள்ளி நிறுவனம் பணம் வழங்கி ஊக்குவித்தது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 468 மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வில் 979 மதிப்பெண்களும் பெற்றார். கல்வி ஒன்றே உலகின் மிகப்பெரிய சொத்து என்று கருதி, அவரது தாயார் ஏழ்மை நிலையிலும் தனது மகனின் கல்வி தொடர விரும்பினார்.
உடுமலை அரசு கலை கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் சேரும் வாய்ப்பு கிடைத்த தியாகு படிப்பை தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதே பகுதி நேர வேலைக்கு சென்று, சம்பாதித்து வந்தார். தேர்வு முடிவில் 78.6 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம், இவரது தாய் நோயினால் இறந்து விட்டார்.
பெற்றோர் இல்லாமல் தவித்த தியாகு, தங்கை ஸ்ரீபிரியாவை, கல்லூரி நண்பரின் தந்தை மணி பாரதி என்பவர், தனது வீட்டில் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், நண்பரின் பெற்றோர் அளித்த ஊக்கத்துடன் பட்ட மேற்படிப்பை தொடர நினைத்த தியாகு, ‘டான்செட்’ தேர்வு எழுதி, எம்.சி.ஏ., முதுநிலை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளார்.
கவுன்சிலிங் முறையில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது படிப்பை தொடர உதவி வேண்டி, திருப்பூரில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலெக்டர் சமயமூர்த்தியிடம் மனு கொடுத்தார். கல்வி கடன் வழங்க, போடிபட்டி பகுதியிலுள்ள கார்ப்பரேஷன் வங்கி சம்மதித்துள்ளது.
எம்.சி.ஏ., படிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், கல்லூரியில் முதலாமாண்டு கல்வி கட்டணம் 65 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.
கல்வி கட்டணம் செலுத்திய ரசீதை கொண்டே குறிப்பிடப்பட்ட வங்கியில் வங்கி கடன் கிடைக்கும் என்ற காரணத்தால், தற்போது தனது மேற்படிப்புக்கு செலுத்த பணம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
ஏழை மாணவரின் கல்விக்கு உதவும் உள்ளம் கொண்டோர், தியாகு 99425 91625 மற்றும் மணிபாரதி (தியாகுவின் பாதுகாவலர்) 98433 27635 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
