UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM
ADDED : ஜூலை 29, 2009 04:06 PM
சென்னை: “தென்மாவட்டங்களில் கட்டப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம், 2.75 லட்சம் பேருக்கு நேரடியாகவும்; 4.50 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்,” என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் நடத்தும் இரண்டு நாள் மனிதவள மாநாடு சென்னையில் ஜூலை 27ம் தேதி துவங்கியது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை,‘ நான்காம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:
தமிழக அரசின் ‘எல்காட்’ நிறுவனம் மூலம் ஏழு இடங்களில் 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. முதல்கட்டமாக, மதுரை, நெல்லை, திருச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களில் கட்டுமானப் பணிகள் துவக்கப்படவுள்ளன.
இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம் 2.75 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 4.50 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். தென்மாவட்டங்களை சேர்ந்த பலர் வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு மற்றும் நகரங்களுக்கு செல்வதை விரும்பவில்லை. எனவே, அங்கு தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அமைச்சர் பூங்கோதை பேசினார்.
தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் டேவிதார், காக்னிசன்ட் டெக்னாலஜி சல்யூசன் நிறுவன துணை தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோர்பேசினர்.
