ராகிங்கை தடுக்க கடும் விதிமுறைகள்: ரூ.2.5 லட்சம் அபராதம்
ராகிங்கை தடுக்க கடும் விதிமுறைகள்: ரூ.2.5 லட்சம் அபராதம்
UPDATED : ஜூலை 30, 2009 12:00 AM
ADDED : ஜூலை 30, 2009 10:46 AM
மணிப்பால்: கர்நாடகாவில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகம், தங்கள் வளாகத்திற்குள் ராகிங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, கடும் விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஸ் (எம்.ஐ.டி.,) இயக்குனர் சோம்நாத் மிஸ்ரா கூறியதாவது:
பல்கலைக்கழக வளாகத்திற்குள் ராகிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, அவர்கள், கல்லூரியில் இருந்தே நீக்கப்படுவர். மேலும் அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க, 100க்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்ட, ராகிங் தடுப்பு குழு அமைக்கப்படும். இந்த குழுவினர், பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள ஓட்டல்கள் உட்பட அனைத்து இடங்களிலும் முறையாக கண்காணிப்பர்.
ராகிங் தடுப்பு குறித்து தகவல்கள் மற்றும் அவற்றிற்கான தண்டனை பற்றி தகவல் கையேடு அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்படும். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது, எவ்வித பாரபட்சமும் இன்றி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சோம்நாத் மிஸ்ரா கூறினார்.
