கூடுதல் கட்டணம்: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் கெடுபிடி
கூடுதல் கட்டணம்: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் கெடுபிடி
UPDATED : ஜூலை 31, 2009 12:00 AM
ADDED : ஜூலை 31, 2009 02:49 PM
இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த மாணவர்களிடம், கூடுதல் கட்டணம் கேட்டு பல இடங்களில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி செய்து வருகின்றன.
கூடுதல் கட்டணம் தராத மாணவர்களுக்கு சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கும் வேலையில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், பல்வேறு வகைகளில் ஆண்டுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், வருவாயை நினைத்து பள்ளி நிர்வாகிகள், கவலையில் ஆழ்ந்துள்ளனர். லாபம் இல்லாவிட்டாலும், பள்ளியை நிர்வகிக்கவும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அளவிற்காவது மாணவர்கள் சேர்வார்களா என்று எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர். இதனால், ஏற்கெனவே சேர்ந்து படிப்பை முடித்த மாணவர்களிடம், முடிந்தவரை கூடுதலாக பணம் பிடுங்கும் வேலைகளில் பல தனியார் பள்ளிகள் இறங்கியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சில பள்ளிகளிலும், காரைக்குடியில் ஒருசில பள்ளிகளிலும், இரண்டாம் ஆண்டு முடித்த மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு பள்ளி நிர்வாகிகள் கெடுபிடி செய்து வருவதாக புகார்கள் வருகின்றன. இதேபோல், பல மாவட்டங்களில் கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை பள்ளி நிர்வாகங்கள் நச்சரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கூடுதல் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தால் தான், சான்றிதழ் தருவோம் என்றும் பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஏற்கெனவே, பல ஆயிரம் ரூபாயை செலவழித்த நிலையில், திடீரென்று கூடுதல் கட்டணத்தை கேட்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
இரண்டாம் ஆண்டு முடித்த மாணவர்கள் அனைவருக்கும் உடனடியாக சான்றிதழ் வழங்கவும், கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் துறை இயக்குனர் முன்வர வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
