இனவெறி தாக்குதல்: ஆஸி.,யில் மாணவர் எண்ணிக்கை சரியும்
இனவெறி தாக்குதல்: ஆஸி.,யில் மாணவர் எண்ணிக்கை சரியும்
UPDATED : ஜூலை 31, 2009 12:00 AM
ADDED : ஜூலை 31, 2009 02:55 PM
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால், இங்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை இனி கணிசமாக குறையும் என, அந்நாட்டு கல்வி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் 93 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் அதிகமான இந்திய மாணவர்கள், அந்நாட்டு இன வெறி இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக, மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரில் தான் அதிகளவில் மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த செய்தி பெரிய அளவில் பத்திரிகைகளிலும், ‘டிவி’க்களிலும் வெளியானதால் இனி ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என, அந்நாட்டு பல்கலைக்கழக நிர்வாகிகள் கவலையடைந்துள்ளனர்.
மெல்போர்ன் பல்கலைக்கழக துணைவேந்தர் கிளென் டேவிஸ் குறிப்பிடுகையில், ‘பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் வாங்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது’ என்றார். விக்டோரியா பல்கலைக்கழக அதிகாரிகள் குறிப்பிடுகையில், ‘மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதால் வெளிநாட்டு மாணவர்களின் வரத்து குறையத்தான் செய்யும்’ என்றனர்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்கி, வேலை பார்க்க நினைக்கும் தகவல் தொழில்நுட்பப் படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் பலர், தங்களது ஆசிரியர்களது ஆய்வுக் கட்டுரைகளையே சமர்ப்பித்து மோசடியில் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச மாணவர்கள் தான், தங்கள் ஆசிரியர்களது ஆய்வுக் கட்டுரைகளையே சமர்ப்பித்துள்ளனர் என்பதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
