முதலாமாண்டு மருத்துவ வகுப்பு ஆக., 3ம் தேதி துவக்கம்
முதலாமாண்டு மருத்துவ வகுப்பு ஆக., 3ம் தேதி துவக்கம்
UPDATED : ஆக 01, 2009 12:00 AM
ADDED : ஆக 01, 2009 10:40 AM
முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் இடங்களை தேர்வு செய்த மாணவர்களில் 27 பேர் மருத்துவக் கல்லூரியில் சேரவில்லை.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூலை 6 முதல் 17ம் தேதி வரை நடந்தது. இந்த கவுன்சிலிங்கின் முடிவில் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஐந்து இடங்களும், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களும் காலியாக இருந்தன.
கோர்ட் உத்தரவை அடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு விட்டது. முதற்கட்ட கவுன்சிலிங்கில் காலியாக உள்ள இடங்கள், இடம் கிடைத்து கல்லூரியில் சேராததால் காலியாகும் இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சிலிங் முடிவில் காலியாக உள்ள இடங்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படவுள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா கூறியதாவது:
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்கள் விவரம் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு பிறகு தான் தெரியும். எனவே, இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங் இம்மாதக் கடைசியில் நடைபெறும். முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள், கல்லூரிகளில் சேர கடைசி நாள், ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 14 பேர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஐந்து பேர், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் எட்டு பேர் என மொத்தம் 27 பேர் கல்லூரிகளில் சேரவில்லை.
இவர்களில் ஆறு எம்.பி.பி.எஸ்., மற்றும் ஆறு பி.டி.எஸ்., மாணவர்கள் பொறியியல் கவுன்சிலிங்கில், தங்களது மருத்துவ சேர்க்கை ஆணையை ஒப்படைத்தவர்கள். அதேபோல, பொறியியல் கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்தவர்களில் ஒன்பது பேர், பொறியியல் இடத்தை கைவிட்டு மருத்துவக் கவுன்சிலிங்கில் சேர்ந்துள்ளனர். தமிழக மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை மறுநாள் (3ம் தேதி) துவங்குகிறது. இவ்வாறு ஷீலா கூறினார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் திருச்சியிலும், கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் காஞ்சிபுரத்திலும் இரு புது மருத்துவக் கல்லூரிகளை துவங்க எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மொத்தமுள்ள 100 இடங்களில் 65 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தால் துவக்கப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், எஸ்.ஆர்.எம்., நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என, சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அக்கல்லூரி தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் என தெரிகிறது.
“அக்கல்லூரியில் ஆய்வு நடத்தப்பட்டு, அதன் பிறகு தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழக இணைப்பு வழங்கப்படும்,” என தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் தெரிவித்தார். இதனால், அக்கல்லூரியில் உள்ள 150 இடங்களில், 97 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் என தெரிகிறது.
சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், எஸ்.ஆர்.எம்., நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட மத்திய அரசு இன்னும் அனுமதி தரவில்லை. எனவே, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படவுள்ள இக்கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்கள் கிடைக்கும்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த, மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நாடு முழுவதும் 50 கல்லூரிகளுக்கு இதுபோல அனுமதி தரப்படாமல் உள்ளது. மாணவர் சேர்க்கையை நடத்த செப்டம்பர் 30ம் தேதி வரை காலஅவகாசம் உள்ளது. இவ்வாறு சுப்புராஜ் கூறினார்.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு 75 ஆயிரம் ரூபாயாக இருந்த தனியார் பல் மருத்துவக் கல்லூரி பி.டி.எஸ்., படிப்பிற்கான கல்விக் கட்டணம் இந்த ஆண்டு 82 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
