UPDATED : ஆக 05, 2009 12:00 AM
ADDED : ஆக 05, 2009 11:27 AM
தமிழகம் முழுவதும் 1,500 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு புதிதாக ஆட்களைத் தேர்வு செய்து நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றிய முறையான அறிவிப்பு, இடைத்தேர்தல் முடிந்ததும், டி.என்.பி.எஸ்.சி., மூலம் வெளியாகவிருக்கிறது.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே 2,500க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு வி.ஏ.ஓ., கூடுதலாக இரண்டு அல்லது மூன்று கிராமங்களை சேர்த்து கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு நாட்கள் என்ற ரீதியில் பல வி.ஏ.ஓ.,க்கள் மாறி மாறி பணியாற்றி வருகின்றனர். இது, பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரியில் சேரும் மாணவர்கள், ஜாதிச் சான்றிதழ், நிரந்தர முகவரிச் சான்றிதழ் போன்றவற்றை வாங்க, அந்தந்தப் பகுதி வி.ஏ.ஓ.,வை தேடி அலைகின்றனர். இது தவிர, நிலத்துக்கான பட்டா வாங்குதல் உள்ளிட்ட பிற பணிகளுக்காகவும் வி.ஏ.ஓ.,வை தேடி அலைய வேண்டியுள்ளது.
இந்நிலையில், தற்போது இருக்கும் வி.ஏ.ஓ.,க்களும் அதிகளவில் பணி ஓய்வு பெற்று வருகின்றனர். குறிப்பாக, ஒரு தாலுகாவில் ஒவ்வொரு மாதமும் ஐந்து முதல் எட்டு வி.ஏ.ஓ.,க்கள் வரை ஓய்வு பெறுகின்றனர். இது, வரும் மாதங்களில் இன்னமும் அதிகரிக்க உள்ளது. வரும் டிசம்பருக்குள், 300 வி.ஏ.ஓ.,க்கள் ஓய்வு பெற்றுவிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வருவாய் உள்ளிட்ட பல முக்கியமான பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 3,000ஐ தாண்டிவிடும்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 1,500 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு புதிதாக ஆட்களைத் தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறை பணிகள் தற்போது டி.என்.பி.எஸ்.சி., மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தல் நடப்பதால், இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் இதற்கான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி.,யில் இருந்து முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வி.ஏ.ஓ., பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இதே போல் பட்டதாரிகளுக்கும் வயது வரம்பு இல்லை.
ஆனால், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 மட்டும் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு உண்டு. இவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் அதிகபட்சம் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அறிவிப்பு வெளியானவுடன் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வெளியான ஒரு மாதத்தில் தேர்வுகள் வைக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அதிகபட்சம் நவம்பர் மாதத்துக்குள் 1,500 புதிய வி.ஏ.ஓ.,க்கள் நியமனம் செய்யப்பட்டுவிடுவர். வி.ஏ.ஓ., பணிக்கு நியமிக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 8,000 ரூபாயாக இருக்கும்.
