UPDATED : ஆக 05, 2009 12:00 AM
ADDED : ஆக 05, 2009 11:32 AM
சென்னை: “கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி நிகழும் மோதலை தவிர்க்க, என்.எஸ்.எஸ்., மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்” என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.,) மாணவர்களுக்கு, கண் பரிசோதனை, ரத்த தானம், எய்ட்ஸ் தடுப்பு ஆகிய சுகாதார முகாம்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவது போன்ற முகாம்கள் தான் நடத்தப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆண்டுதோறும் 230 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கல்லூரி மாணவர்களிடையே மோதல்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. பெற்றோர்களிடம் ஏற்படும் பிரச்னை, பணப்பிரச்னை, தவறான பழக்க வழக்கங்கள், ஜாதிப் பிரச்னைகள், அரசியல் தலையீடு ஆகியவற்றால் தான், மாணவர்களிடையே மோதல்கள் நடக்கின்றன. இதற்காக, என்.எஸ்.எஸ்., திட்டத்தின்கீழ், கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி கவுன்சிலிங் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, சில கல்லூரி மாணவர்களை அழைத்து, ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் பத்து நாட்கள் முகாம் நடத்தப்படும். அம்முகாமில், நல்லொழுக்கம், நல்லிணக்கம், வாழ்க்கைத் திறன் மேம்பாடு, தனிமனித ஆளுமைத் திறன் மேம்பாடு, வாழ்க்கையின் மதிப்பு, தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவை குறித்து பயிற்சியளிக்கப்பட உள்ளது.
மேலும், எப்படி பொறுப்புள்ள குடிமகனாக இருப்பது, வன்முறை மற்றும் மோதல்களை எப்படி தவிர்ப்பது ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்படும். மேலும், ‘ராகிங்’ மற்றும் ‘ஈவ்-டீசிங்’கில் ஈடுபடாமல் தவிர்ப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்படும். கல்லூரிகளில் பிரச்னைக்குரிய மாணவர்கள் அடையாளம் காணப் பட்டு, அவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படும். மேலும் அவர்களது பெற்றோர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும்.
சமுதாயத்தில் பெரிய ஆட்கள், மத, சமூக, அரசியல் தலைவர்களை அழைத்து, மாணவர்களிடையே உரை நிகழ்த்த வைக்கவுள்ளோம். பள்ளிப் படிப்பு வரை மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கவனிக்கின்றனர். அதன் பிறகு கல்லூரியில் சேரும்போது, மாணவர்களின் செயல்பாட்டை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிப்பது குறைந்துவிடுகிறது.
என்.எஸ்.எஸ்., மூலம் நடத்தப்படும் இந்த பத்து நாள் சிறப்பு முகாமில், ஒரு நாள், விருப்பமுள்ள பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.
