பொதுத்தேர்வு எழுதுவோர் பட்டியல்: அக்டோபரில் பணி துவக்கம்
பொதுத்தேர்வு எழுதுவோர் பட்டியல்: அக்டோபரில் பணி துவக்கம்
UPDATED : ஆக 12, 2009 12:00 AM
ADDED : ஆக 12, 2009 11:39 AM
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் விவரம் குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி, அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குகிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் குறித்து, மாவட்ட வாரியாக பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணி, கடந்த காலங்களில் அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னரே நடந்து வந்தது. சில தனியார் பள்ளிகளில், கடைசி நேரத்தில் மாணவர்களை பட்டியலில் சேர்ப்ப தாக எழுந்த புகாரையடுத்து, ஒரு சில ஆண்டுகளாக, முன்கூட்டியே பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.
அதன்படி, வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் குறித்த முழு விவரம் அடங்கிய பட்டியல் தயாரிப்புப் பணியை, அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நடத்துவதற்கு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் காலாண்டுத் தேர்வுகள் நடக்கின்றன. இந்தத் தேர்வுகள் முடிந்ததும், பட்டியல் தயாரிப்புப் பணி நடைபெறும்.
இரண்டாவது பட்டியலில் கூடுதலாக மாணவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தால், அந்த மாணவரின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை, ஆறு லட்சத்து 40 ஆயிரத்து 844 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த எண்ணிக்கை, வரும் பொதுத்தேர்வில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை மட்டும் ஏழு லட்சத்து 44 ஆயிரத்து 463 மாணவர்கள் எழுதினர். இந்த எண்ணிக்கை 50 ஆயிரம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
