நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் வருமான வரித்துறை சோதனை
நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் வருமான வரித்துறை சோதனை
UPDATED : ஆக 13, 2009 12:00 AM
ADDED : ஆக 13, 2009 12:21 PM
சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை அலுவலகத்தில், வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர், ‘ரெய்டு’ நடத்தினர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலையின் கீழ் இன்ஜினியரிங், மெடிக்கல், பல் மருத்துவம், பார்மசி, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. விநாயகா மிஷன் சேர்மன் சண்முகசுந்தரம் பல்கலையை நிர்வகித்து வருகிறார்.
தற்போது, நிகர்நிலை பல்கலையில் மாணவ, மாணவியரிடம் அதிக கட்டணம் வசூலித்து சேர்க்கை நடந்து வருவதாக புகார் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் பல்வேறு படிப்புகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.
கோவை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கூடுதல் இணை இயக்குனர் ஜெயராமன், சேலம் வருமான வரித்துறை உதவி இயக்குனர் கருப்புசாமி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆக. 12ம் தேதி காலை அரியானூரில் உள்ள விநாயகா மிஷன் பல்கலை அலுவலகத்தில் நுழைந்து திடீர், ‘ரெய்டில்’ ஈடுபட்டுள்ளனர்.
பல்கலை வளாகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் தடை விதித்தனர்; போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். கார், வாகனங்கள் அனைத்தும் வெளியே செல்லாமல் முடக்கப்பட்டன. பல்வேறு பாடப்பிரிவுக்கான அரசு நிர்ணயித்த கட்டண விகிதம் குறித்தும், கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்காக வசூலித்த கட்டணம் குறித்த ஆவணங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த கட்டமாக, பல்கலை சேர்மன் சண்முகசுந்தரம் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களது வீடுகளிலும் ‘ரெய்டு’ நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
