சிறுபான்மை கல்லூரியில் நியமனம்: துணைவேந்தருக்கு யு.ஜி.சி., கடிதம்
சிறுபான்மை கல்லூரியில் நியமனம்: துணைவேந்தருக்கு யு.ஜி.சி., கடிதம்
UPDATED : ஆக 13, 2009 12:00 AM
ADDED : ஆக 13, 2009 12:20 PM
சென்னை: “சிறுபான்மை கல்லூரிகளால் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்தகுதி ஒப்புதல் வழங்கும் விஷயத்தில், ‘தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் கமிஷன்’ விதிமுறைகளை பின்பற்றுமாறு, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, யு.ஜி.சி., இணை செயலர் பதக் கடிதம் எழுதியுள்ளார்,” என யு.ஜி.சி., உறுப்பினர் சேவியர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த லயோலா கல்லூரி செயலர் பீட்டர் கூறியதாவது:
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமனம் செய்யப்பட்ட 228 விரிவுரையாளர்கள் மற்றும் ஆறு முதல்வர்களுக்கு கல்வித் தகுதி ஒப்புதல் வழங்க சென்னை பல்கலைக்கழகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. பல்கலைக்கழகம் கேட்டபடி, மே மாதம் 15ம் தேதி அனைத்து சிறுபான்மை கல்லூரிகளும் உறுதிமொழி கடிதம் வழங்கி விட்டன. அதன் பிறகும் கல்வித் தகுதி ஒப்புதல் வழங்கப்படவில்லை.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆக. 14ம் தேதி நடக்கும் சிண்டிகேட் கூட்டத்தில், இப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணப்படும் என, அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதால், மேற்கொள்ள இருந்த போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். சிண்டிகேட் கூட்டத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு பீட்டர் கூறினார்.
யு.ஜி.சி., உறுப்பினர் சேவியர் அல்போன்ஸ் கூறுகையில், “சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, யு.ஜி.சி., இணை செயலர் பதக் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், முதல்வர்கள் பணியிடங்களுக்கு கல்வித் தகுதிக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம், யு.ஜி.சி., 2009 விதிமுறைகள் ஆய்வுக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இறுதி விதிமுறைகள் விரைவில் வெளிவரவுள்ளன. அதுவரை தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் கமிஷன் விதிமுறைகளை பின்பற்றி முடிவுகளை எடுக்கவும்’ என குறிப்பிட்டுள்ளார்,” என்றார்.
