UPDATED : ஆக 13, 2009 12:00 AM
ADDED : ஆக 13, 2009 01:03 PM
‘பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பள்ளிகளில் காலியாக உள்ள 70 சதவீத நூலகர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்’ என, நூலகர் மற்றும் தகவல் அறிவியல் வளர்ச்சிக் கழகத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள நூலகர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் வளர்ச்சிக் கழகத்தினர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். ‘அனைத்து காலிப் பணியிடங்களையும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நூலகங்களை ஏற்படுத்தி நூலகர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். நூலக நல வாரியம் அமைக்க வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் அங்கப்பன் கூறியதாவது:
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூலகர், துணை நூலகர், உதவி நூலகர், நூலக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், தற்போது 15 ஆயிரம் பேர் மட்டுமே இப்பணியிடங்களில் வேலை செய்கின்றனர்; 35 ஆயிரம் (70 சதவீதம்) பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மூன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே நூலகங்கள் செயல்படுகின்றன. நூலகர், துணை நூலகர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், 60க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நூலகங்கள் பூட்டிக் கிடக்கின்றன. பொது நூலகங்கள், பள்ளிகளில் உள்ள நூலகங்களிலும் பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த 18 ஆண்டுகளாக நூலகர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், பி.எல்.ஐ.எஸ்.சி., படிப்பு முடித்தவர்கள் பலர், ‘டாஸ்மாக்’ கடைகளில் பணிபுரியும் அவல நிலை உள்ளது. இவ்வாறு அங்கப்பன் கூறினார்.
