‘ஐ.டி., கம்ப்யூட்டர் படிப்புகளில் சேர தயங்க வேண்டாம்’
‘ஐ.டி., கம்ப்யூட்டர் படிப்புகளில் சேர தயங்க வேண்டாம்’
UPDATED : ஆக 13, 2009 12:00 AM
ADDED : ஆக 13, 2009 01:11 PM
இந்தியாவில் பொறியியல் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது தமிழகம். இந்த ஆண்டில் உருவான 92 புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளைச் சேர்த்து மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இந்த ஆண்டில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிஸ், சிவில் பாடங்களில் சேர்வதில் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டினார்கள். அதேசமயம், கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதில் மாணவர்களிடம் அதிக ஆர்வம் இல்லை.
பொருளாதார தேக்கநிலை காரணமாக, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. அதேசமயம், ஐ.டி., படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமலும் மற்ற பொறியியல் பாடப்பிரிவுகளைப் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்ததா என்று பார்த்தால் அவ்வாறு எதுவும் இல்லை. பொதுவாக, அனைத்துத் துறைகளுக்குமான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இதுவரை, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த கணிசமான மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே பணியில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பொருளாதாரநிலை மேம்படும்போது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக தகவல் தொழில்நுட்பத் துறையே இருக்கும் என்பதை நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகியவை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கக் கூடிய முக்கியத் துறைகள் என்பதில் சந்தேகமில்லை. தொழில் நிறுவனங்களிலும் சமூகத்தின் பல்வேறு பணிகளிலும் கம்ப்யூட்டரின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. வணிகவியல், பொருளாதாரம், மேலாண்மை, வர்த்தகம், அறிவியல், பொறியியல், மருத்துவம், உயிரியல் உள்பட பல்வேறு துறைகளில் கம்ப்யூட்டரின் பயன்பாடு முக்கியமானதாகியுள்ளது. எனவே கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையும் மிகப் பெரிய துறையாக உருவாகி வருகிறது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய சாப்ட்வேர் தொழில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது. இந்திய ஐ.டி., நிறுவனங்கள் சர்வதேச அளவில் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வருகின்றன. ஐ.டி., சூப்பர் பவர் என்ற நிலையை இந்தியா எட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை. 1998ல் இந்திய ஐ.டி., துறையின் வருவாய் 4 பில்லியன் டாலர்தான். தற்போது இந்த வருவாய் 52 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தற்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் 20 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போதைய பொருளாதார தேக்க நிலை இருந்த போதிலும்கூட, 2010ம் ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 22 லட்சமாக உயரும் என்று நாஸ்காம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார நிலை சீரடைந்து வரும் சூழ்நிலையில் இந்திய ஐ.டி. துறை வளர்ந்து வருகிறது.
பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் அமெரிக்காவில் ஐ.டி., துறையை விட பெரிதும் பாதிக்கப்பட்டது, ஆட்டோமொபைல், ஸ்டீல் அது தொடர்பான துறைகள் தான் என்பதையும் நாஸ்காம் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 35 சதவீதம் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியாகும். நான்கு ஐந்து பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பெற்றுள்ளது. எனவே வெளிநாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் திறன்வாய்ந்த தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
எச்-1பி விசா வழங்குவதற்கு அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும்கூட, அதனால் இந்திய ஐ.டி., தொழிலுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டு வருவதை தாமதப்படுத்தும் என்றே ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்க ஐ.டி., தேவைகளுக்கான விரும்பத்தக்க நாடாக இந்தியாவே திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பொருளாதார தேக்க நிலையில் இருந்து விரைவில் விடுபடுவதற்கு உதவும் வகையில் எச்1-பி விசாக்களின் எண்ணிக்கையை தற்போதைய 85 ஆயிரம் என்ற நிலையிலிருந்து 1.9 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க அறிவார்ந்தோர் அமைப்பு அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை விரைவில் மேம்படும் என்றும். அதைத் தொடர்ந்து டெலிகாம், வயர்லெஸ் துறைகளும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடத் தொடங்கும் என்று கருதப்படுகிறது. எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்களும் எடுத்துப் படிக்க நினைக்கும் மாணவர்களும் இப்படிப்புகள் குறித்து தயக்கம் காட்டத் தேவையில்லை. இந்த ஆண்டில் இப்படிப்புகளில் சேரும் மாணவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் படித்து முடிக்கப் போகிறார்கள். அந்தக் கால கட்டத்தில் தற்போதைய தேக்க நிலை நீடிக்க வாய்ப்பு இல்லை. எனவே, அந்த காலகட்டத்தில் திறமை வாய்ந்த கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்பைப் படித்த மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
