UPDATED : ஆக 13, 2009 12:00 AM
ADDED : ஆக 13, 2009 05:01 PM
சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஆக. 12ம் தேதி பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்றார். மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதாவது:
மாணவி அங்கீதா: இந்தியா 2020ல் வல்லரசு நாடாக மாறுவதில் எது முக்கியத்துவம் வகிக்கும்?
அப்துல்கலாம்: தற்போதுள்ள 30 கோடி குழந்தைகள் தான், முக்கியத்துவம் வகிப்பர்.
மாணவி சுவாதி ரத்னா: விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வருவது ஆபத்தானது என்கின்றனர், உண்மையா?
அப்துல்கலாம்: இதை நான் மறுக்கிறேன். விமானத்தை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்யவும் பயன்படுத்தலாம். ஒரு நாட்டின் மீது குண்டு போடவும் பயன்படுத்தலாம். அதை போல நல்லவர்கள் கையில் விஞ்ஞானம் இருக்கும் வரை எந்த ஆபத்தும் கிடையாது. நல்ல நாடுகள் வசம் நல்ல விஞ்ஞானம் இருக்க வேண்டும்.
மாணவன் மாஸ்டர் சர்வேஸ்: ‘பயோ-வார்’ விளைவுகள் எப்படி இருக்கும்?
அப்துல்கலாம்: இது மனித இனத்துக்கு எதிரானது. அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
மாணவன் அருண் கார்த்திக்: ஏன் விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சி செய்யக்கூடாது?
அப்துல்கலாம்: இதில் எனக்கும் விருப்பம் உள்ளது. நான் <உலக நாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகளிடம் இது பற்றி பேசியுள்ளேன். எனது 2050 திட்டத்தில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அப்துல்கலாம் பதிலளித்தார்.
சேலம் சோனா கல்லூரியில் பொன்விழா கொண்டாட்ட துவக்கவிழாவில், மாணவர்களின் கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பதில் அளித்தார். அவை வருமாறு:
மாணவி ஹிரல்பகத்: விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளதா?
அப்துல்கலாம்: கணித மேதை ராமானுஜர், நமக்கு அளித்துள்ள கணித வடிவங்கள் ஒவ்வொன்றுமே கடவுளின் எண்ணமாகவே கருதுகிறேன்.
மாணவன் கார்த்திக்: எந்த நிகழ்வு உங்களை விஞ்ஞானியாக தூண்டியது?
அப்துல்கலாம்: பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது, என் ஆசிரியர் பறவை குறித்தும், அது பறப்பது குறித்தும் விளக்கும் போது, ‘ஏரோநாட்டிகல்’ குறித்த விதை எனக்குள் விழுந்திருக்கலாம்.
மாணவி ஷோபனா: எப்படி தோல்வியிலிருந்து மீண்டு வந்தீர்கள்?
அப்துல்கலாம்: வான்வெளி சுற்றுப்பாதைக்கு செல்லும் என நம்பிய பல நூறு கோடி மதிப்புள்ள எஸ்.எல்.வி., வங்காள விரிகுடாவில் விழுந்தது. அப்போது கூட திருவள்ளுவரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன. தோல்வியை கண்டு பயப்படாமல் இருந்தால், தோல்வியை தோற்கடிக்கலாம்.
மாணவன் பிரதீப் விக்னேஷ்: பலருக்கும் நீங்கள் ரோல் மாடலாக உள்ளீர். உங்களது ரோல் மாடல் யார்?
அப்துல்கலாம்: விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் ஆகியோரை கூறலாம்.
மாணவன் சக்தி: உங்கள் வாழ்வின் திருப்பு முனை?
அப்துல்கலாம்: இஸ்ரோவில் இருந்து எனக்கு ராக்கெட் இன்ஜினியராக அழைப்பு வந்த நாளை கூறலாம்.
கென்யா மாணவி வெரில் அட்டினோ: இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உங்களது அறிவுரை?
அப்துல்கலாம்: ஒவ்வொரு துறையிலும் இரு நாடுகளும் இணைந்து முன்னேறும் வகையில் உங்களது நடவடிக்கைகளும், ஆய்வுகளும் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
