UPDATED : ஆக 13, 2009 12:00 AM
ADDED : ஆக 13, 2009 05:44 PM
இந்நிலையில், 30 ஆயிரத்து 199 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங் மூலமாக, இதுவரை 83 ஆயிரத்து 552 மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ், இந்தாண்டு மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 102 பொறியியல் இடங்கள் இருந்தன. இவற்றில் சேர ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 708 மாணவர்கள் விண்ணப்பித்ததில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
பொதுப் பிரிவில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டதில், 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரத்து 715 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 291 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் 69 ஆயிரத்து 669 இடங்கள் என மொத்தம் 79 ஆயிரத்து 675 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் 99 இடங்கள், தொழிற்பிரிவில் 3,482 இடங்கள், பிற மாநிலங்கள் பிரிவில் 45 இடங்கள் என மொத்தம் 83 ஆயிரத்து 552 இடங்களில் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டு 7 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக இருந்தநிலையில், இந்தாண்டு 30 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு இந்தாண்டு புதிதாக 92 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம்.
