மாணவர் எண்ணிக்கையை உயர்த்த புதுச்சேரி பல்கலை இலக்கு
மாணவர் எண்ணிக்கையை உயர்த்த புதுச்சேரி பல்கலை இலக்கு
UPDATED : ஆக 14, 2009 12:00 AM
ADDED : ஆக 14, 2009 11:59 AM
காலாப்பட்டு: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 84 பேராசிரியர்களுக்கான வரவேற்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.
விழாவில் துணைவேந்தர் தரீன் பேசியதாவது:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர கடந்தாண்டு 10,992 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்தாண்டு 26,560 பேர் விண்ணப்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் சேர ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் இப்பல்கலைக்கழகத்தின் தரம் உயர்ந்து இருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
பல்கலைக்கழகத்தில் தற்போது 251 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதனை 460 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலையில் தற்போது பல்வேறு துறைகளில் 2742 மாணவர்கள் படிக்கின்றனர். இதனை 2012ம் ஆண்டிற்குள் 5,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆய்வுப் பணிக்கு பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளிக்கிறது.
யூ.ஜி.சி., சி.எஸ்.ஐ.ஆர்., டி.பி.டி, டி.எஸ்.டி., நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தில் தற்போது 30.46 ரூபாய் கோடி செலவில் 191 திட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. 12 துறைகள் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வருகின்றன. பல்கலைக் கழகத்தின் உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 79 கோடி செலவில் பல்வேறு துறைகளுக்கு கட்டடம் கட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராமங்களை சமூக பணித் துறை, வெளியுலக தொடர்பு துறை வழியாக பல்கலைக்கழகம் தத்தெடுக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் பின் தங்கிய பகுதிகளில் படித்த வேலையற்ற பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழும் பகுதியில் கின்டர் கார்டன் பள்ளி துவங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பேராசிரியரும் ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குனர் பாலசுப்ரமணியன், பதிவாளர் லோகநாதன், பேராசிரியர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
