அடுத்த கல்வியாண்டுக்கு பாடப்புத்தகம் அச்சிடும் பணி தயார்
அடுத்த கல்வியாண்டுக்கு பாடப்புத்தகம் அச்சிடும் பணி தயார்
UPDATED : ஆக 14, 2009 12:00 AM
ADDED : ஆக 14, 2009 03:56 PM
அடுத்த கல்வியாண்டுக்கு தேவைப்படும் (2010-2011) எட்டு கோடி இலவச பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான பணிகள் இப்போதே துவங்கியுள்ளன.
சென்னை, சிவகாசி நகரங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அச்சக நிறுவனங்கள், டெண்டரில் பங்கேற்றுள்ளன. ஒரு வாரத்திற்குள், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் பயிலும் ஒரு கோடி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 502 தலைப்புகளில், 529 பாடநூல்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிடுகிறது. இந்த வகையில், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு கோடி பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அடுத்த கல்வியாண்டிற்கு தேவையான எட்டு கோடி பாடப்புத்தகங்களை முன் கூட்டியே அச்சிடுவதற்கான பணிகளை, பாடநூல் கழகம் இப்போதே துவக்கியுள்ளது.
புத்தகங்களை அச்சிடுவதற்கு சமீபத்தில் டெண்டர் கோரப்பட்டன. இதில், சென்னை, சிவகாசி நகரங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அச்சக நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இது குறித்து, டெண்டரில் கலந்து கொண்டுள்ள ஓர் அச்சகத்தின் உரிமையாளர் கூறுகையில், “கடந்த ஆண்டு 1,000 பிரதிகளை ஒரு பக்கம் அச்சடிக்க 33 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான நிறுவனங்கள் 45 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளன.
நடப்பாண்டு டெண்டரில் 15க்கும் மேற்பட்ட புதிய அச்சக நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வழக்கமாக 100 அச்சகங்கள் வரை, பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளில் ஈடுபடும். இந்த ஆண்டும் இதே எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்படலாம்,” என்றார்.
பாடநூல்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போதைய நிலவரப்படி 30 சதவீத பாடப்புத்தகங்கள் இருப்பில் உள்ளன; 70 சதவீத புத்தகங்களைத் தான் அச்சிட வேண்டியுள்ளது. டெண்டரில் கலந்து கொண்டுள்ள நிறுவனங்களுக்கு 10 நாட்களில் ஆர்டர் வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அச்சிடும் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது, 80 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு கோடி பாடப்புத்தகங்களும் தயாராக இருக்கும்,” என்றார்.
கடந்த ஆண்டு வரை, பாடப்புத்தகங்கள் வினியோகிப்பில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன. பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை பாடநூல் கழக குடோன்களுக்குச் சென்று பெற்று வர வேண்டிய நிலை இருந்தது. இதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், நடப்பு கல்வியாண்டில் பாடநூல் கழகமே நேரடியாக அனைத்து பள்ளிகளுக்கும் இலவச பாடநூல்களை வினியோகம் செய்தது. இதேபோல், வரும் கல்வியாண்டிலும் பாடநூல் கழகமே நேரடியாக பாடநூல்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
