எஸ்.சி., -எஸ்.டி., சட்டதிருத்தம்; எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
எஸ்.சி., -எஸ்.டி., சட்டதிருத்தம்; எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
UPDATED : செப் 07, 2018 12:00 AM
ADDED : செப் 07, 2018 12:11 PM
புதுடில்லி: எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில், நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நேற்று நடந்தது.
எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், சில மாதங்களுக்கு முன், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டோர், எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது செய்யக் கூடாது என்றும், தீவிர விசாரணைக்கு பின் கைது செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த தீர்ப்பு, வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் உள்ளதாக, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, சமீபத்தில் நடந்த, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில், இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில், நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதனால், மத்திய பிரதேச மாநிலத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. மேலும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், 144 தடை உத்தரவு போடப்பட்டது.
மாநிலத்தில், பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. பதற்றமான பகுதிகளில், துணை ராணுவ படையினர் மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.போராட்டத்தால் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பீஹார் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. தலைநகர் பாட்னாவில் உள்ள, ராஜேந்திர நகர் ரயில்வே ஸ்டேஷனில், போராட்டக்காரர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
