UPDATED : அக் 05, 2009 12:00 AM
ADDED : அக் 05, 2009 12:17 PM
கோவை: ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் ‘இளைய தலைமுறையும் சமூக பொறுப்புகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும், யு.பி.எஸ்.சி., உறுப்பினருமான பாலகுருசாமி கருத்தரங்கில் பேசியதாவது:
இளமை என்பது வயதில் அல்ல; நமது செயலில் உள்ளது. முதிய வயதிலும் சிந்தனையில் இளமை இருந்தால் எப்போதும் நாம் இளமையாக இருக்கலாம். அதிக இளைஞர்களை கொண்ட இந்தியா, 2020ல் பெரிய சாதனைகள் புரியும். உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நான்காவது நாடாக இந்தியா உள்ளது. இது பெருமைக்குரியது.
நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 70 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர். 70 சதவீத மக்கள் சரியான கழிவறை வசதி இல்லாமல் உள்ளனர். 30 சதவீதத்தினர் சுகாதாரமான நீர் இல்லாமலும் உள்ளனர். 53 சதவீத மக்கள் சேரிகளில் வசிக்கின்றனர். இந்த குறைகளை போக்கி உலகமயமாக்கலில் இந்தியாவை முன்னேற வைப்பது இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. இவ்வாறு, பாலகுருசாமி பேசினார்.
கல்லூரியின் தலைவர் பால்சந்த்ஜி தலைமை தாங்கினார். பாரதியார் பல்கலையின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பத்மநாபன், கல்லூரியின் துணை முதல்வர் மஞ்சுளா, செயலர் புராடியா உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
