வகுப்புக்கு ஒரு ஆசிரியர்: அமைச்சர் பொன்முடி நம்பிக்கை
வகுப்புக்கு ஒரு ஆசிரியர்: அமைச்சர் பொன்முடி நம்பிக்கை
UPDATED : அக் 08, 2009 12:00 AM
ADDED : அக் 08, 2009 11:50 AM
திருவெண்ணெய்நல்லூர்: தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த முதல்வர் கருணாநிதி, வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை கொண்டு வருவார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் தரம் உயர்த்தப்பட்ட மகளிர் மேல்நிலைப் பள்ளியை துவக்கி வைத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
ஒரு காலத்தில் படிப்பதும், பட்டம் பெறுவதும் கடினமாக இருந்தது. தற்போது அந்நிலை மாறி, கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியின் தரம் உயருவதற்கு சமச்சீர் கல்வியை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏழை, பணக்காரனுக்கு ஒரேவிதமான கல்வி திட்டம் வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல் செயல்முறைக் கல்வியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நன்மைகளை யாரும் நினைக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கல்வியின் தரம் உயர வேண்டுமானால் சமச்சீர் கல்வி அவசியம். வரும் 2010-11ல் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பிற்கு ஒரேவிதமான கல்வி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்த காலத்தில், தமிழில் கற்றுக் கொடுக்கவில்லை. அதனால் தான், கருணாநிதி 1972ல் தமிழ்மொழி பாடத்திட்டத்தை கொண்டு வந்தார்.
தற்போது, தி.மு.க., ஆட்சியில் 65 கலைக் கல்லூரிகளுக்கு 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக பி.எட்., பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த கருணாநிதி, வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை கொண்டு வருவார். நாட்டில் கல்வித்திறன் உயருவது ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது. அவர்கள் நினைத்தால் தரமான கல்வியை வழங்கமுடியும். மாணவிகள், புத்தகப் புழுக்களாக இருந்துவிடாமல் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
