UPDATED : அக் 14, 2009 12:00 AM
ADDED : அக் 14, 2009 05:40 PM
உடுமலை: தமிழகத்தில் நூலகத் துறையை மேம்படுத்த எழுச்சி ஆண்டாக கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுநூலகத் துறையின் நடவடிக்கைகளை செம்மைப்படுத்தவும், மேம்படுத்தவும் இத்திட்டம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ‘நமது உலகம் நூலகம்’ என பெயரிட்டு அழைக்க பள்ளி கல்வித்துறை அமைச்சரால் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பொது நூலகத்துறை இயக்குநர் அறிவொளி, மாவட்ட நூலக அலுவலர் மூலமாக நூலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நூலகங்களை தூய்மை செய்யவும், நூலக வளாகத்தை அழகுபடுத்தி அனைவரையும் ஈர்க்கச் செய்யவும், நூலகத்தை சுற்றியுள்ள இடங்களில், பூச்செடிகள், மூலிகைச்செடிகள், மரக்கன்றுகள் அமைக்கவும், வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு இனிமையான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முனைப்புத்திட்டம், புரவலர்களை அதிகமாகச் சேர்க்கவும், பள்ளி மாணவர்களை நூலகங்களுக்கு அழைத்து நூலகங்களின் செயல்பாடுகளை அறியச் செய்ய வேண்டும். நூலகங்களில் ஒவ்வொரு வாரமும் நல்ல தமிழ் படிப்போம் அல்லது எழுதுவோம் வகுப்புகள் நடத்துதல் வேண்டும். வாசகர்கள் தாங்கள் வாசித்து, நேசித்த நூல்களை நன்கொடையாக வழங்க ஏற்பாடு செய்தல், தனியார் அமைப்புகளுடன் நூலக இயக்கத்தை ஒருங்கிணைத்து மேன்மையாக்குதல் வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாவட்ட மைய நூலகத்திற்கும், மாவட்ட அளவில் சிறந்த 2 நூலகங்களுக்கும் விருது வழங்கப்படும். இவ்விருது நூல்களை பராமரிக்கும் முறை, சுற்றுப்புறத்தூய்மை, நூல்களை பராமரிக்கும் பாங்கு, உறுப்பினர் வருகை எண்ணிக்கை, நூலகத்தில் செயல்படுத்தும் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து வழங்கப்படும். ஒவ்வொரு வட்டத்திலும் நூலகத்திற்கு வருகை புரிந்து அதிக நூல்களைப் படிக்கும் மாணவர்களை ஆண்டுதோறும் கண்டுபிடித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கையொப்பமிட்ட சான்றிதழ் வழங்க வேண்டும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
