‘அரசு அதிகாரிகள் வழங்கும் பிறப்பு சான்றிதழே உண்மையானது’
‘அரசு அதிகாரிகள் வழங்கும் பிறப்பு சான்றிதழே உண்மையானது’
UPDATED : அக் 23, 2009 12:00 AM
ADDED : அக் 23, 2009 11:43 AM
மதுரை: பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி வேறாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் வழங்கும் பிறப்பு சான்றிதழை உண்மையானதாக கருதும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சிவகங்கையை சேர்ந்த தீபக் தாக்கல் செய்த ரிட் மனு:
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளேன். நான் 1983 அக்., 30ல் பிறந்தேன். என் பிறப்பை நகராட்சியில் பதிவு செய்துள்ளேன். ஆனால் தவறுதலாக பள்ளி சான்றிதழில் என் பிறந்த தேதி 1983 ஜூன் 1 என பதிவாகி விட்டது. கான்ஸ்டபிள் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 1983 ஜூலை 1க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 26 வயதினராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி பிறப்பு சான்றிதழ் படி எனக்கு 26 வயது. எழுத்து தேர்வு வரும் அக்., 25ல் நடக்கவுள்ளது. தேர்வுக்கு என்னை அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந் துள்ளேன். இந்நிலையில் என் பிறந்த தேதியை நகராட்சி சான்றிதழில் உள்ளபடி எடுத்துக் கொள்ள வேண்டும் என தேர்வு துறை அதிகாரிக்கு மனு செய்தேன். அதை அவர் நிராகரித்து விட்டார்.
நகராட்சி அதிகாரிகள் அளித்த சான்றிதழ்படி தேர்வு எழுத உத்தரவிட வேண்டும், மேலும் பள்ளி சான்றிதழிலும் அந்த பிறந்த தேதியை குறிப்பிட உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது மொய்தீன் ஆஜரானார்.
நீதிபதி கே.என்.பாஷா, “பிறப்பு சான்றிதழ் கொடுக்க அரசு அதிகாரி(நகராட்சி கமிஷனர்) தான் தகுதியானவர். அந்த சான்றிதழ்படி மனுதாரரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். பள்ளி சான்றிதழ்களிலும் அந்த தேதியை பிறந்த தேதியாக பதிவு செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டார்.
