கொரோனா பரவலை குறைக்கும் மவுத் வாஷ்: ஆய்வாளர்கள் தகவல்
கொரோனா பரவலை குறைக்கும் மவுத் வாஷ்: ஆய்வாளர்கள் தகவல்
UPDATED : ஆக 12, 2020 12:00 AM
ADDED : ஆக 12, 2020 11:54 AM
பெர்லின்:
மவுத் வாஷ்கள் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்குமென்பதால், அதைப் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால், வைரஸ் பரவலை குறுகிய காலத்திற்கு குறைக்க முடியும் என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
&'தொற்று நோய்கள்&' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ், முக்கியமாக பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருக்கும் போது, இருமல், தும்மல் மற்றும் பேசும்போதும் திரவத்துளிகள் வழியே பரவுகிறது. ஆரோக்கியமான நபரின் மூக்கு, வாய் மற்றும் கண்ணீர் வழியே வைரஸ் தொற்று உள்ளுக்குள் பரவுகிறது. சில கொரோனா நோயாளிகளின் வாய் மற்றும் தொண்டையில் அதிக அளவு வைரஸ் துகள்கள் அல்லது வைரஸ் சுமை இருப்பதாக, ஜெர்மனியில் உள்ள &'ருர்&' பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜெர்மனியில் சந்தையில் விற்கப்படும் பல்வேறு கலவையுடன் கூடிய எட்டு மவுத்வாஷ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஒவ்வொரு மவுத்வாஷையும், வைரஸ் துகள்கள் மற்றும் உமிழ்நீரை உருவாக்கும் பொருளுடனும் கலந்து, 30 வினாடிகள் குலுக்கிய பின், &'வெரோ இ6&' கலங்களில் சோதனை செய்யப்பட்டது. சோதனை செய்யப்பட்ட அனைத்து தயாரிப்புகளும், ஆரம்ப வைரஸ் எண்ணிக்கையை குறைத்துள்ளன. ஆனால், சில மவுத்வாஷ்கள், 30 விநாடிகளுக்கு பின் எந்த வைரசையும் கண்டறிய முடியாத அளவிற்கு வீரியம் இழந்துள்ளன.
மவுத்வாஷ்கள் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால், உமிழ்நீரில் உள்ள வைரஸ் சுமையைக் குறைக்கும். இதனால், கொரோனா பரவுவதை குறுகிய காலத்திற்குக் குறைக்கலாம். ஆனால், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க அல்லது கொரோனா தொற்று தாக்காமல் பாதுகாத்து கொள்ள, &'மவுத்வாஷ்&'கள் முற்றிலும் பொருத்தமானவை அல்ல. இவ்வாறு, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
