தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மறக்கவே கூடாத மங்கையர்க்கரசிகள்!

மறக்கவே கூடாத மங்கையர்க்கரசிகள்!

மறக்கவே கூடாத மங்கையர்க்கரசிகள்!


UPDATED : ஆக 15, 2020 12:00 AM

ADDED : ஆக 15, 2020 06:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2020 12:00 AM ADDED : ஆக 15, 2020 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் சுதந்திர கால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், எத்தனை பெண்கள், தியாகம், வீரம், கடமை, நாட்டுப்பற்று என்று ஆண்களுக்கு நிகராக, சுதந்திர வேள்வியில் பங்கேற்று, பாரதத்தாயின் மணிமகுடத்தில் மாணிக்கங்களாய் மின்னுகின்றனர் என்பதை அறிய முடியும். வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, ஜான்சி ராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா, லக்ஷ்மி சேகல் போன்ற எத்தனையோ பெண்கள், பாரதத்தாயின் அடிமை விலங்கை அறுத்தெறிய அரும்பாடுபட்டுள்ளனர்.
அவர்களை தவிரவும், அதிகம் அறியப்படாத சில மாதரசிகளை இந்த சுதந்திர தினத் திருநாளில் நாம் நினைவுகூர்வது, அவர்களின் ஒப்பற்ற தியாகத்துக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், நம் தமிழ்ப் பெண்மணி, சரஸ்வதி ராஜாமணி அம்மையார். 1927ல் ரங்கூனில் பிறந்த தமிழ் வழி இந்தியரான இவரது குடும்பம், நாட்டு விடுதலைக்காக பலவிதத்திலும் உதவியது.
மஹாத்மா காந்தி, ஒரு முறை, ரங்கூனில் சரஸ்வதி ராஜாமணி இல்லத்திற்குச் சென்ற போது, 10 வயது சிறுமியான சரஸ்வதி, துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்தச் சிறுமியிடம் வன்முறை தவறென்று சுட்டிக்காட்டினார் மஹாத்மா. அதற்கு, &'என் நாட்டைக் கொள்ளையடிக்கும் வெள்ளையனை கொல்வது தான், அவர்களுக்கு சரியான தண்டனை&' என்று, அஹிம்சையைப் போதித்த அண்ணலிடமே, தைரியமாக வாதிட்டவர் சரஸ்வதி அம்மையார்.
அவரது, 16வது வயதில், ரங்கூனில் நேதாஜி நடத்திய இந்திய சுதந்திரம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்றார். நேதாஜியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட சரஸ்வதி, தான் அணிந்திருந்த தங்க, வைர நகைகளை போராட்ட நிதியாக கொடுத்துச் சென்றார்.கூட்டம் முடிந்தவுடன், 16 வயது சிறுமி ஒருத்தி, தன் நகைகளை கொடுத்துச் சென்றதை அறிந்த நேதாஜி, அவரின் வீடு தேடிச்சென்று, அவரது பெற்றோரிடம் நகைகளை திருப்பிக் கொடுக்க முற்பட்டார்.
விடுதலைக்காக கொடுத்தேன்

அப்போது அந்த சிறுமி, &'அது என் நகை; அதை என் தாய் நாட்டின் விடுதலைக்காக கொடுத்தேன்&' என்று சொல்லி, திரும்ப வாங்க மறுத்துவிட்டார். அவளின் உறுதியையும், நாட்டுப்பற்றையும் பார்த்து வியந்த நேதாஜி, அவரை இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவில் சேர அழைப்பு விடுத்தார். தன், 16வது வயதில் இந்தியாவின் இளம் உளவாளியாக, சுதந்திரப் போராட்ட வாழ்வைத் துவக்கிய சரஸ்வதி ராஜாமணி அம்மையார், பின், இந்திய தேசிய ராணுவத்தின் முக்கிய தலைவரானார்.
உளவு பார்த்து வெள்ளையரிடம் மாட்டிக்கொண்டு, தப்பிக்கும் போது காலில் குண்டடி பட்டார். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த அவர், தன் இறுதிக் காலத்தில் வறுமையில் வாடினார். அந்த நிலையிலும் தனக்குக் கிடைத்த தியாகிகள் பென்ஷன் தொகையை, 2005ல் ஏற்பட்ட, &'சுனாமி&' பேரிடருக்கு நிவாரண நிதியாக அளித்தார். இவர் கஷ்டப்படுவதை அறிந்த, முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா, இவருக்கு, 5 லட்சம் ரூபாய், வீடு வழங்கி கவுரவித்தார். 2018ல் அவர் மறைந்தார்.
இந்திய மண்ணில் ஆங்கில அரசின் ராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போராடிய புரட்சிப் போராளிகளில், &'யுகாந்தர்&' என்ற புரட்சி இளைஞர் இயக்கத்தின் தளபதியாக விளங்கிய சூர்யா சென் மிக முக்கியமானவர். இவரது இளைஞர் படையில் ஆண்களோடு, பெண்களும் இருந்தனர். ப்ரீத்தி லதா வடேகர், கல்பனா தத் என்ற இரண்டு பெண்களும், சூர்யாவின் திட்டங்களை செயலாற்றுவதில் வீர சாகசம் படைத்தவர்கள்.
ஆங்கிலேய அரசின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கு, வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தின் அருகில் இருந்தது. அங்கிருந்து தான் ராணுவத்துக்கும், காவல் துறைக்கும் ஆயுதங்கள் அனுப்பப்பட்டன. சூர்யா சென் தலைமையில், இளம் புரட்சிப் போராளிகள் பலர், 1930 ஏப்ரலில், அந்த ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர். அங்கு குவிந்து கிடந்த துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் மூட்டைகளாகக் கட்டி எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்த வழக்கில் தப்பித்த சூர்யா சென், கல்பனா, ப்ரீத்தி லதா போன்றோர், ஒரு கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். அதில், சிறை சென்ற சிலரை சந்தித்து வரும்படி ப்ரீத்தி லதாவை அனுப்பினார், சூர்யா சென். அதை ஏற்றுக்கொண்ட ப்ரீத்தி, 42 முறை வெவ்வேறு வேடங்களில், சிறை அதிகாரிகளை ஏமாற்றி, கூட்டாளிகளை சந்தித்து திரும்பியது சாகச வரலாறு.
சில நாட்கள் கழித்து ப்ரீத்தி, கல்பனா தத் இருவரும், வெள்ளையர் மதுவருந்தி கேளிக்கையில் ஈடுபடும் கிளப் ஒன்றில் நேரடித் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். ஆனால், ஆண் உடையில் நடமாடிய, கல்பனா தத் கைது செய்யப்பட்டார். மனம் தளராத ப்ரீத்தி, திட்டத்திலிருந்து பின்வாங்காமல், தன் தோழர்களுடன் அந்தக் கேளிக்கை விடுதியில் நுழைந்து வெடிகுண்டுகளை வீசியும், கைத்துப்பாக்கியால் சுட்டும் வெள்ளையரை வீழ்த்தினார்.
போராட்ட வாழ்க்கை

காவலர்கள் அவரைச் சுற்றி வளைத்ததும், இனி தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து சயனைடு விஷத்தை விழுங்கி, தற்கொலை செய்து கொண்டார், சூர்யா சென் கண்டெடுத்த அந்தப் பெண் சிங்கம். கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்த கல்பனா தத், கோல்கட்டாவிலிருந்து வெடி பொருட்களை யாரும் அறியாமல் சிட்டகாங்கில் சேர்க்கும் ஆபத்தான பணியில் ஈடுபட்டார்;
வெடிகுண்டு தயாரிப்பதிலும் பயிற்சி பெற்றிருந்தார். தலைமறைவாக இருந்த சூர்யாவையும், பிறரையும் நள்ளிரவில் தன்னந்தனியாக காட்டிலும், மலையிலும் சென்று சந்திக்கும் நெஞ்சுறுதி கொண்டிருந்தார்.சிறையிலிருந்த தோழர்களை விடுவிக்க சிறைச்சாலையையும், நீதிமன்றத்தையும் வெடிகுண்டு வீசி தகர்க்கத் திட்டமிட்டார்.
ஆனால், அதற்கு முன்பே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். ஆறு ஆண்டுகள் கழித்து, 1939ல் விடுதலை செய்யப்பட்ட கல்பனா, பின்பு பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து, தன் போராட்ட வாழ்க்கையை தொடர்ந்தார்.
நம் எல்லாருக்குமே, ஜான்சி ராணி லட்சுமி பாயை நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் அவரது பெண்கள் படைப் பிரிவில் முக்கியப் பங்காற்றிய, ஜல்காரிபாயை இங்கே நினைவுகூர்வது, அவரது வீரத்துக்கும், எஜமான விசுவாசத்துக்கும் நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.
ஜல்காரிபாய் குதிரையேற்றம், ஆயுதங்களைக் கையாளும் திறமை பெற்றவர். ஒரு சமயம் காட்டில் புலி ஒன்று அவரை தாக்கிய போது, கோடாரியால், புலியைக் கொன்ற அதிவீரம் மிக்கவர். ராணி லட்சுமி பாயின் படையில் இணைந்து, போர் முறைகளின் அனைத்து பிரிவுகளிலும் திறமையை வளர்த்துக் கொண்டார். துப்பாக்கி சுடுவது, பீரங்கிகளை இயக்குவதிலும் நிபுணத்துவம் பெற்றார்.
ஆங்கிலேயப் படை ஜான்சி கோட்டையின் மீது பலமுறை படையெடுத்தபோது, லட்சுமிபாய் தலைமையிலான படை மிகுந்த தீரத்துடன் போரிட்டது. அப்படியான ஒரு போரின் போது, ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துச் செல்வதற்காக, அவரைப் போலவே தோற்றம் கொண்ட ஜல்காரிபாய், ராணியைப் போலவே உடையணிந்து, தாமே படையை முன்னின்று நடத்தினார்.
மிகுந்த தீரத்துடன் போரிட்ட போதும் ஆங்கிலேயரிடம் பிடிபட்டார். தங்களிடம் பிடிபட்டது லட்சுமிபாய் இல்லை என்று உணர்ந்த ஆங்கிலேய அதிகாரிகள், ஜல்காரிபாயின் வீரத்தையும், எஜமான விசுவாசத்தையும் மதித்து அவரை விடுதலை செய்தனர். எனினும், போரில் அவர் இறந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன.

புரட்சி இளைஞன்

கடந்த, 1850களிலேயே இவ்வளவு வீர தீரத்துடன் வாழ்ந்த இந்த பெண்ணரசிகளை பற்றிப் பெருமையாகப் பேசும் அதே நேரம், இன்னமும் நாம் பெண் சுதந்திரத்திற்காகவும், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் குரலெழுப்ப வேண்டிய சூழல் இருப்பது வருத்தத்தைத் தருகிறது.
இப்படி சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கு பெற்ற பல வீரப் பெண்மணிகள், நாம் மறக்கவே கூடாத மாணிக்கங்கள். அதேபோல் போராட்டக் களத்தில் இளம் புரட்சியாளர்களுக்கு ஆதரவு தந்து, ஊக்கப்படுத்தி, மறைமுகமாக உதவிய பல தியாகப் பெண்மணிகளை அறிந்திருக்க வேண்டியதும் அவசியம். வணக்கத்துக்குரிய அத்தகைய பெண்மணிகளில் மூல்மதி அம்மையார் முக்கியமானவர்.
கடந்த, 1925 ஆகஸ்ட், 9ல், லக்னோ அருகில், ககோரி ரயில் கொள்ளையை தலைமையேற்று நடத்திய புரட்சி இளைஞன் ராம் பிரசாத். &'பிஸ்மில்&' என்ற புனைப்பெயரில் எழுச்சிமிக்க எழுத்துக்களை தந்த புரட்சிக் கவிஞரும் கூட. இவரது தாய் தான், மூல்மதி அம்மையார்.ரயில் கொள்ளை வழக்கில்பிடிபட்ட, ராம் பிரசாத் பிஸ்மில் உட்பட, நான்கு பேருக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றுவதற்கு முதல் நாள், தன் மகனை கடைசி முறையாக காண்பதற்கு, ராம்
பிரசாத்தின் தாய் மூல்மதி சிறைக்கு வந்தார். தாயை இனிமேல் காண இயலாது என்ற எண்ணத்தில், கவிஞனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பார்த்த அன்னை பதறினாள்... வேதனையில் விளைந்த பதற்றமல்ல அது.&'மகனே, ஏன் கண் கலங்குகிறாய். ஒரு காவிய நாயகனைப் பெற்றிருக்கிறேன் என்ற பெருமையில் அல்லவா திளைத்திருக்கிறேன்.
என் தவப்புதல்வனின் பெயரை உச்சரிக்கும் போதே, வெள்ளையனின் உடல் நடுங்குகிறது என்ற பேரானந்தத்தில் நீந்துகிறேன். லட்சிய அன்னை&'ஆனால், மரணத்துக்கு என் வீரமகன் அஞ்சுவான் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. அழுகையோடு சாவைச் சந்திப்பவன்; புரட்சி நடவடிக்கைகளில் ஏன் ஈடுபட்டாய்?&' என்று பொங்கினாள், அந்த புரட்சியாளனைப் பெற்றெடுத்த லட்சிய அன்னை.
&'அம்மா, இது மரண பயத்தில் வந்த சோகக் கண்ணீர் இல்லை. வீரம் செறிந்த என் அன்னையை நினைத்து வந்த ஆனந்தக் கண்ணீர்&' என்று பதிலளித்த ராம் பிரசாத் பிஸ்மில். துாக்கு தண்டனை நாளில் ஒரு நாயகனாக நெஞ்சுயர்த்தி, &'வந்தே மாதரம்&' என்று வீர முழக்கமிட்ட படி, துாக்குக் கயிற்றின் முன் நின்றான். மகனின் வீர மரணத்துக்காக பெருமை கொண்ட அந்தத் தாய், தன் அடுத்த மகனையும் சுதந்திர வேள்வியில் ஈடுபடச் செய்தாள் என்கிறது வரலாறு.
பெற்ற பிள்ளைக்கு சிறு துன்பம் வந்தாலே கலங்கித் துடிக்கும் நாம், ஒரு சராசரித் தாயாக சிந்தித்தோம் என்றால், மூல்மதி அம்மையாரின் தியாகமும், வீர உணர்வும், நாட்டுப்பற்றும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இப்படி எண்ணற்ற மாமனிதர்களின் வீரத்தாலும், தியாகத்தாலும், ரத்தத்தாலும் கட்டமைக்கப்பட்டது தான், நம் சுதந்திரம் என்ற உண்மை உணர்வோடு, சுதந்திரத்தைப் போற்றிக் கொண்டாடுவோம்.
- லதா சந்திரசேகர்
இ - மெயில்: ikshu1000@yahoo.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us