ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் துவங்க விதிமுறைகள் கடுமை
ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் துவங்க விதிமுறைகள் கடுமை
UPDATED : அக் 24, 2009 12:00 AM
ADDED : அக் 24, 2009 10:31 AM
புதுடில்லி: ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கான விதிமுறைகள் திருத்தப்பட்டு, புதிய பள்ளிகள் துவங்க கடும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் புற்றீசல் போல் ஏராளமான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிறுவனங்களுக்கெல்லாம் என்.சி.டி.இ., அங்கீகாரம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஆசிரியர் கல்விக்கான சீரமைப்புக் குழு, கடந்த 2007ம் ஆண்டு விதிமுறைகளை திருத்தி, சமீபத்தில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் முன், பள்ளியின் கட்டமைப்பு, பள்ளிக்கான நிலம், ஆசிரியர்கள் ஆகிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான மாணவர்கள் சேர்க்கப்படுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, அதிகபட்சமாக ஒரு நிறுவனத்தில் 300 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும்.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளி அமையும் இடம் குத்தகையாக இருந்தால், குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகை உரிமை பெற்றிருந்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். ‘ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இயங்கும் வளாகத்தில், வேறு எந்தவிதமான கல்வி நிறுவனங்களையும் அனுமதிக்கமாட்டோம்’ என்று, பள்ளி நிர்வாகம் உறுதி தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
