கல்லுாரி இறுதியாண்டு தேர்வு; புத்தகங்களை பார்த்து எழுதிய மாணவர்கள்
கல்லுாரி இறுதியாண்டு தேர்வு; புத்தகங்களை பார்த்து எழுதிய மாணவர்கள்
UPDATED : செப் 22, 2020 12:00 AM
ADDED : செப் 22, 2020 10:39 AM
புதுச்சேரி;
திட்டமிட்டப்படி இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு துவங்கியது. மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதினர்.
புதுச்சேரி பல்கலையின் இணைப்பு கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்வு முறையை தேர்ந்தெடுக்க குறைந்த நாட்களே இருந்தால் தேர்வை 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, இன்ஜினியரிங், கலை அறிவியல், நர்சிங், கல்வியியல் படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வு நேற்று துவங்கியது.ஆன்-லைன் மற்றும் ஆப்-லைனில் தேர்வு நேற்று நடத்தப்பட்டது.
தேர்வெழுத வந்த மாணவர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றினர்.மாணவர்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதிக்கப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள், மகப்பேறு அடைந்த மாணவிகள் தனித்தனி அறைகளில் தேர்வெழுதினர். மொத்தம் 10 ஆயிரம் மாணவர்கள் தங்களது இறுதியாண்டு தேர்வினை எழுதினர்.
ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறைகளில் குறிப்பேடுகள் மற்றும் புத்தகங்களை பார்த்து எழுத அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.வீட்டில் இருந்து ஆன்-லைனில் தேர்வு எழுதிய மாணவர்கள் ஏ-4 தாளில் கருப்பு மை கொண்டு விடைகளை எழுதினர். அந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு 30 நிமிடங்களில் ஒரே பி.டி.எப்.,பைலாக அனுப்பி வைத்தனர்.
இந்த விடைத்தாள் அனைத்தும் திருத்தம் செய்வதற்காக இன்று 22ம் தேதி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. தொடர்ந்து பல்வேறு படிப்புகளுக்கு 29ம் தேதி வரை இறுதியாண்டு தேர்வு நடக்கின்றது. காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆன்லைனில் வழியாக 204 மாணவர்களும், ஆப் லைனில் 144 மாணவர்களும் இறுதியாண்டு தேர்வில் பங்கேற்றனர். நிறுவன இயக்குநர் சங்கரராஜ், தேர்வாணையர் சிவமாதவன் ஆகியோர் தேர்வறைகளை பார்வையிட்டனர்.
