குற்ற வழக்கு இளஞ்சிறார்களுக்கு தொழில் திறன் பயிற்சி விழிப்புணர்வு
குற்ற வழக்கு இளஞ்சிறார்களுக்கு தொழில் திறன் பயிற்சி விழிப்புணர்வு
UPDATED : செப் 22, 2020 12:00 AM
ADDED : செப் 22, 2020 10:40 AM
சென்னை:
குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட இளஞ்சிறார்களுக்கு, தொழில் நெறி, திறன் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட இளஞ்சிறார்களை மீட்டு நல்வழிப்படுத்த, சென்னை காவல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சென்னை காவல் துறை இணைந்து, இளஞ்சிறார்களுக்கு, தொழில் நெறி மற்றும் திறன் பயிற்சிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறது.
கிண்டியில் நடந்த நிகழ்ச்சியை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் விஷ்ணு நேற்று துவக்கி வைத்தார். இதில், 47 வழக்குகளில் அறியப்பட்ட இளஞ்சிறார்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:
இளஞ்சிறார்கள், சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக வாழ வேண்டும். எனவே, குற்றங்களை மறந்து, தன்னை சார்ந்தவர்களை பாதுகாக்கும் நல்ல மனிதர்களாக வாழ, இந்த பயிற்சி உதவும். சமுதாய வளர்ச்சியில், தமிழக அரசும், காவல் துறையும் எடுக்கும் இது போன்ற நிகழ்வுகள், இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோல், சென்னை கிழக்கு மண்டலம், மயிலாப்பூர் காவல் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்டோருக்கு, புலனாய்வு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடந்த பயிற்சியை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று துவக்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக, விரிவுரையாளர் சிவகுமார் பங்கேற்று, இந்திய தண்டனை சட்டத்தின் முக்கிய பிரிவுகளும், காவல் துறையின் கடமைகள் குறித்தும் விளக்கினார்.
