பல்கலை விரிவுரையாளர் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
பல்கலை விரிவுரையாளர் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
UPDATED : அக் 28, 2009 12:00 AM
ADDED : அக் 28, 2009 02:31 PM
சென்னை பல்கலையில் பொதுப்பிரிவின் கீழ், தத்துவவியல் விரிவுரையாளராக அந்தோணி சவேரிராஜை நியமித்து, பல்கலை பதிவாளர் உத்தரவிட்டார். இப்பதவியில், நியமிக்க அவர் போதுமான தகுதியைப் பெறவில்லை. எனவே, அவரை விரிவுரையாளராக நியமித்து, பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, ஜான் பால்ராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அந்தோணி சவேரிராஜ், புனேவில் உள்ள ஞானதீப வித்யாபீடத்தில் பெற்ற முதுகலைப் பட்டத்தை ஏற்று பல்கலை அவரை விரிவுரையாளராக நியமித்துள்ளது எனக் கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, ஜான் பால்ராஜ் தாக்கல் செய்த அப்பீல் மனுவில், அந்தோணி சவேரிராஜ் பெற்றுள்ள முதுகலைப் பட்டம், பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) சட்டப்படி, யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பெற்றதல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு, சென்னை பல்கலை சார்பில், அந்தோணி சவேரிராஜ், வித்யாபீடத்தில் பெற்ற பட்டத்தின் அடிப்படையில் எம்.பில்., பி.ஹெச்டி., பட்டங்களை முடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அப்பதவியில் நியமிக்க அவருக்குத் தகுதி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
யு.ஜி.சி., சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், புனேவில் உள்ள ஞானதீப வித்யாபீடம், யு.ஜி.சி., சட்டத்தின் கீழ் பல்கலைகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆகவே, அந்த கல்வி நிறுவனம், பட்டம் வழங்க அதிகாரம் கிடையாது. அந்த கல்வி நிறுவனத்தில் அந்தோணி சவேரிராஜ் பெற்ற பட்டம், யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்டதல்ல&' எனக் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகோபாத்யா, நீதிபதி கிருபாகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, தேவையான தகுதிகளைப் பெற்றிருக்காத ஒருவரை, பல்கலை, உறுப்புக் கல்லூரி, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் ஆசிரியர் பணியில் நியமிக்க முடியாது. இந்த வழக்கில் அந்தோணி சவேரிராஜ் ஞானதீப வித்யாபீடத்தில் பெற்றுள்ள பட்டத்தை, யு.ஜி.சி., சட்டப்படி இந்திய பல்கலை பட்டமாகக் கருத முடியாது. அதனால், அவர் சட்டப்படி போதுமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை.
எனவே, அந்தோணி சவேரிராஜ், இந்திய பல்கலையில் இருந்தோ, அதற்கு சமமான வெளிநாட்டு பல்கலையில் இருந்தோ பட்டம் பெறவில்லை எனக் கருதப்பட்டு, அவரை, விரிவுரையாளராக நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், விரிவுரையாளர் பணிக்கு, மனுதாரர் மற்றும் பிற விண்ணப்பதாரர்களை நியமிப்பது குறித்து இரண்டு மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
