பள்ளிகளுக்கு எதிராக அவமதிப்பு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
பள்ளிகளுக்கு எதிராக அவமதிப்பு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
UPDATED : செப் 24, 2020 12:00 AM
ADDED : செப் 24, 2020 11:20 AM
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதால், கல்வி கட்டணத்தை செலுத்தும்படி, பெற்றோரை வற்புறுத் தக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு, 2020 ஏப்ரலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், கல்வி நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். ஆகஸ்ட் மாதத்தில், 40 சதவீத கட்டணமும், வகுப்புகள் துவங்கிய பின், இரண்டு மாதங்களில், 35 சதவீத கட்டணமும் வசூலிக்க அனுமதி அளித்தார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தும்படி, கல்வி நிறுவனங்கள் வற்புறுத்துவதாக, பெற்றோரிடம் இருந்து புகார்கள் வருவதாக, நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்க, பள்ளி கல்வி துறைக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். 40 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்த, வரும், 30ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தும் உத்தர விட்டார். இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் தரப்பில், துணை செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கை:
நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது தொடர்பாக, 111 பள்ளிகள் குறித்து புகார்கள் வந்தன. அந்தப் பள்ளிகளிடம் விளக்கம் கோரப்பட்டது. ஒன்பது பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் நிரூபிக்கப்பட்டன.
100 சதவீத கட்டணத்தையும் செலுத்தும்படி, இந்தப் பள்ளிகள், பெற்றோரை வற்புறுத்தி உள்ளன. அதில், 97 பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. ஐந்து பள்ளிகளிடம் இருந்து, பதில் வர வேண்டியுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அம்பத்துாரில் உள்ள, உசைன் நினைவு மெட்ரிக் குலேஷன் பள்ளி; திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ சங்கரா வித்யா கேந்திரிய மெட்ரிக்குலேஷன் பள்ளி; விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள எஸ்.எச்.என்.வி., பள்ளி. விருதுநகரில் உள்ள பி.எஸ்.சிதம்பர நாடார் பள்ளி; சாஸ்திரிய வித்யசாலா மெட்ரிக் பள்ளி; சாஸ்திரிய வித்யசாலா மேல்நிலை பள்ளி; கோவையில் உள்ள பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி; ராமநாதபுரத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலை பள்ளி ஆகியவற்றுக்கு எதிரான புகார்கள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி மறுப்பு
இதையடுத்து, பள்ளி கல்வித்துறை அறிக்கை அடிப்படையில், ஒன்பது பள்ளிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து, பள்ளிகள் தரப்பில் பதில் அளிக்க, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தொடர்பாக, இ - மெயில் முகவரி ஏற்படுத்தி, புகார்கள் பெற்று, அக்., 14க்குள் அறிக்கை அளிக்கவும், சி.பி.எஸ்.இ., மண்டல அதிகாரிகளுக்கு, நீதிபதி உத்தரவிட்டார். கட்டணம் செலுத்துவதற்கு, இந்த மாதம் வரை அளிக்கப்பட்ட அவகாசத்தை, மேலும் நீட்டிக்க, நீதிபதி மறுத்து விட்டார்.
