UPDATED : அக் 10, 2020 12:00 AM
ADDED : அக் 10, 2020 12:41 PM
தென்னிந்திய கல்வி மையம் சார்பில், &'தேசிய கல்விக் கொள்கை- - 2020&' என்ற, ஐந்து நாள் இணைய வழி கருத்தரங்கம் நடந்தது. கல்வியாளர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றினர்.
நிறைவு விழாவில், தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
நாடு வளரும் சூழலில், நம் சமுதாயத்திற்கு ஏற்ற, தேவையான புதிய கல்வி கொள்கை சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான நபர்களிடமிருந்து, ஆலோசனை பெற்று, மிகப்பெரிய வல்லுனர் குழு அமைத்து, அலசி ஆராய்ந்து, புதிய கல்வி கொள்கை அறிவிக்கப் பட்டு உள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகம் செய்யும் போது, எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும். கருத்து கூறும் ஜனநாயகம், நல்ல விஷயத்தை நாட்டிற்கு கிடைக்க விடாமல் செய்து விடக்கூடாது.
நோய் எதிர்ப்பு
புதிய கல்வி கொள்கையில், தாய்மொழியில் ஆரம்ப கல்வி கற்பிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆரம்ப கல்வியை தாய்மொழியில் ஆரம்பித்தால், மூளை விரிவடைந்து, கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும். குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள், தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வெறும் தாய்ப்பால் மட்டும் கொடுத்தால், குழந்தை புஷ்டியாக தெரியாது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வாழ்நாளும் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மையை தரும்.
அதேபோல, தாய்மொழி கல்வி, கிரகிக்கும் தன்மையை அதிகரித்து, மற்ற கல்வியை கற்க உந்தும். கூடுதல் மொழி கற்க வேண்டுமா என, சிலர் கேட்கின்றனர். பத்து வயது வரை, எத்தனை மொழிகளை கற்றுக் கொடுத்தாலும், கிரகிக்கும் தன்மை உள்ளது. நான் இப்போது தெலுங்கு கற்க சிரமப்படுகிறேன். பிற மொழி படிப்பை, ஏன் எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை. என் தாய்மொழி எனக்கு பிடிக்கும்; அது என் ரத்தத்தில் உள்ளது. பிற மொழி படிப்பதால், என் தாய்மொழியை, என்னிடம் இருந்து பிரிக்க முடியாது.
மாநிலம் தாண்டி, கல்வி, வேலைவாய்ப்புக்கு, மற்றவர்களுடன் போட்டியிட, வேறு மொழி கற்க வேண்டியது அவசியம். எனவே, குழந்தைகள் பல மொழி கற்கும் வாய்ப்பை பறிக்க வேண்டாம்.
தன்னம்பிக்கை
நான் ஒரு டாக்டராக கூறுகிறேன். வளரும் மூளை, கற்றுக் கொள்ள வாய்ப்பு தாருங்கள் என்கிறது; வாய்ப்பை சுருக்க வேண்டாம்.அதேபோல, கைத்தொழில் கற்றுக் கொள்வதால், கல்வி திக்காது. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும்.புதிய கல்வி கொள்கை, மாநில அதிகாரத்திற்கு பங்கம் விளைவிக்கவில்லை. மொழியை திணிப்பது போல, மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இது, அனைவருக்கும் வேண்டிய கல்வி கொள்கை.
தெலுங்கானாவில், குழந்தைகள் அனைத்து மொழிகளையும் கற்கின்றன.புதிய கல்வி கொள்கை, புதியதோர் பாரதம் படைக்க, உறுதியாக நமக்கு உதவி செய்யும்; இளைஞர்களுக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும். இவ்வாறு, அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் கோலாகலஸ்ரீநிவாஸ் பேசுகையில், &'&'புதிய கல்வி கொள்கையால், அறிவாற்றலில், இந்தியா வல்லரசாக திகழும். அப்போது, வளர்ந்த நாடாக, இந்தியா தானாகவே நகரும். புதிய கல்வி கொள்கை, இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்,&'&' என்றார்.
