UPDATED : டிச 14, 2020 12:00 AM
ADDED : டிச 14, 2020 10:44 PM
கடலுார் மாவட்டம், சிதம்பரநாதன் பேட்டையை சேர்ந்த சித்ரா என்பவர் தாக்கல் செய்த மனு:
என் மகள் தர்ஷிணி, பிளஸ் 2 வில், 488 மதிப்பெண்; நீட் தேர்வில், 175 மதிப்பெண் பெற்றார்.மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தார். நவ., 19ல் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்றார். தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் கட்டணம் செலுத்த, எங்கள் நிதி நிலைமை சரியில்லாததால், காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர்.
கல்வி கட்டணத்தை வற்புறுத்தாமல், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களை சேர்க்கும்படி அரசு உத்தரவிட்டது.என் மகள் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மறுநாள், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தகுதி இருந்தும், 7.5 சதவீத ஒதுக்கீட்டு சலுகையை, என் மகளால் பெற முடியவில்லை. மருத்துவப் படிப்பில், என் மகளுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி இலக்கியா சார்பில், அவரது தாயார் ராஜலட்சுமி என்பவர், மனு தாக்கல் செய்தார்.மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில்,மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
கூடுதல் இடங்களை உருவாக்குவது ஒன்றும் புதிது அல்ல. ரெகுலர் காலியிடங்களில், அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க முடியவில்லை என்றால், கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை, அரசு மருத்துவ கல்லுாரிகளில் உருவாக்கி, ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள் அனைவரையும், இந்த ஆண்டில் சேர்க்க முடியும்.அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இதை விட வேறு நல்ல வழியில்லை.
சிறப்பு நேர்வாக கருதி, 24 அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை கூடுதலாக உருவாக்கி, மாணவர்களை சேர்ப்பதற்கு, தேசிய மருத்துவ ஆணையம் பரிசீலிக்கும் என, இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.விசாரணை, வரும், 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
