50 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் என்.ஆர்.காங்., மீது நாராயணசாமி பாய்ச்சல்
50 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் என்.ஆர்.காங்., மீது நாராயணசாமி பாய்ச்சல்
UPDATED : டிச 18, 2020 12:00 AM
ADDED : டிச 18, 2020 08:11 PM
புதுச்சேரி;
&'என்.ஆர்.காங்., ஆட்சியில், தனியார் மருத்துவ கல்லுாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களை பெறும் வகையில் ஷரத்துக்கள் உள்ளன&' என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என, ஏப்ரலில் கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்பினோம். அந்த கோப்பினை, 45 நாட்களுக்கு பிறகு, மத்திய உள்துறைக்கு கவர்னர் அனுப்பினார். சுகாதாரத்துறைக்கு அந்த கோப்பு போனபோது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு பதில்களை தெரிவித்து விட்டது. ஆனால் அந்த கோப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.
புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளை துவக்கும்போது, 50 சதவீத இடங்களை அரசுக்கு தருவதாக உறுதி அளித்துள்ளன. இதில் இரண்டு சிறுபான்மை கல்லூரிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 50 சதவீதம் தர இயலாது என்று தெரிவித்துள்ளது. கடந்த 2009ல், அப்போதைய ஆட்சியாளர்கள், கல்லூரி நிர்வாகங்கள் விரும்பினால் மட்டுமே 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டனர். அதில், &'விரும்பினால் என்பதற்கு பதிலாக, &'கண்டிப்பாக&' என குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தொடர்ந்து, 2012ல் என்.ஆர்.காங்., அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் இடையேயான ஒப்பந்தத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களை பெறும் வகையில் ஷரத்துக்கள் உள்ளன. இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த ஷரத்துக்களையும் சிறுபான்மையினருக்கான சலுகையை தனியார் மருத்துவ கல்லூரிகள் சுட்டிக்காட்டியதால் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.
இருப்பினும் புதுச்சேரி அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும். மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர் களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அர சாணை வெளியிட முயற்சித்தபோது, கவர்னர் முட்டுக்கட்டை போட்டு, அந்த கோப்பை மத்திய உள்துறைக்கு அனுப்பி விட்டார். இந்த கோப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையின் கேள்விக்கு புதுச்சேரி அரசு விளக்கம் அளித்துள்ளது. இவ்வழக்கில், அரசுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.
நீதிமன்ற வழிகாட்டுதல்படி இவ்விவகாரத்தில் அரசு செயல்படும்.கொரோனா, நிவர் புயல் உள்ளிட்ட தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மற்ற பொருள்களின் விலையும் உயரும். எனவே, பிரதமர் மோடி தலையிட்டு, காஸ் விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் நமச்சி வாயம், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.
