UPDATED : ஜன 28, 2021 12:00 AM
ADDED : ஜன 28, 2021 12:46 PM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் யு.ஜி.சி., நிர்ணயித்த சம்பளம் வழங்க கோரி ஆசிரியர்கள் 4 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கல்லுாரியில் 40க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். 5வது ஊதியக் குழு அடிப்படையில் யு.ஜி.சி., ரூ.25 ஆயிரம் சம்பளம் நிர்ணயித்தது. 6 வது ஊதியக் குழுவால் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதை நடைமுறைப்படுத்தவில்லை.
குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் வழங்க கோரி மூட்டா கிளை தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் ராமசுந்தரம், நிர்வாகிகள் ரமேஷ்ராஜ், அலெக்ஸ்பாண்டி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
கோரிக்கை குறித்து கல்லுாரி நிர்வாகத்துடன் 2016 முதல் பேசியும் பயனில்லை. 2019 டிச.,ல் நடந்த பல்கலை நிதிக்குழு ஒப்புதல் அளித்து ரூ.25 ஆயிரம் வழங்க பல்கலை சிண்டிகேட் முடிவு செய்தது. தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் துணைவேந்தரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை, என்றனர்.
