UPDATED : பிப் 03, 2021 12:00 AM
ADDED : பிப் 03, 2021 10:51 AM
சென்னை:
அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா மீதான விசாரணையை நிறுத்தி வைக்கலாமா என, உயர் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அண்ணா பல்கலையின் துணை வேந்தராக, சுரப்பா பதவியேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இவரது நிர்வாகத்தில், டெண்டர், தேர்வு நடைமுறை, பேராசிரியர், பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில், மாற்றங்களை ஏற்படுத்தினார். ஏற்கனவே, அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை நிறுத்தினார். அமைச்சர் மற்றும் உயர்கல்வி செயலர்களுக்கான கூடுதல் செலவுகளை, பல்கலையில் இருந்து நிறுத்தினார்.
துணை வேந்தர் மற்றும் பதிவாளரின் நேரடி கட்டுப்பாட்டில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனால், பல்கலைக்கும், உயர் கல்வித் துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகின. இந்நிலையில், துணை வேந்தர் சுரப்பா மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, அரசு உத்தரவிட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சுரப்பாவுக்கு எதிராக, புதிய புகார்களை அளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பின், புகார் கொடுத்தவர், பல்கலை பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு, &'சம்மன்&' அனுப்பி, நேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, விசாரணையின் முன்னேற்றங்களை, உயர் கல்வித் துறை ஆய்வு செய்துள்ளது. சுரப்பாவின் பதவிக்காலம், இரண்டு மாதங்களில் முடிய உள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்காவிட்டால், விசாரணையை கைவிடலாம் என, சட்ட வல்லுனர்கள் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது. சுரப்பா மீதான விசாரணைக்கு எதிராக, ஐகோர்ட்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
மேலும், துணை வேந்தர் நிர்வாகத்தில் குளறுபடி இருந்தால், அதை பல்கலை வேந்தரான கவர்னரிடம் தெரிவிக்கலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுரப்பா மீதான விசாரணை, விரைவில் கைவிடப்படலாம் என, உயர் கல்வி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
