UPDATED : பிப் 11, 2021 12:00 AM
ADDED : பிப் 11, 2021 04:21 PM
புதுச்சேரி;
கல்லுாரி நிர்வாகம் அறிவித்தபடி, &'ஆன்லைன்&' தேர்வு நடத்த வலியுறுத்தி, பாரதிதாசன் கல்லுாரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது. இக்கல்லுாரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக, மாணவிகளுக்கு &'ஆன்லைன்&' வழியாக வகுப்புகள் நடந்தது. கடந்த மாதம், கல்லுாரிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடந்து வருகிறது. 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவிகளுக்கு, செமஸ்டர் தேர்வு, வரும் 15ம் தேதி துவங்க உள்ளது.
செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது, &'ஆன்லைன்&' அல்லது &'ஆப்லைன்&' (நேரடியாக) தேர்வு எழுத விருப்பம் கோரப்பட்டது. 90 சதவீத மாணவிகள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென ஆன்லைன் தேர்வுகள் கிடையாது. அனைவரும் நேரடியாக கல்லுாரிக்கு வந்து தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த 2 மற்றும் 3ம் ஆண்டு பயிலும் நுாற்றுக்கணக்கான மாணவிகள், நேற்று கல்லுாரியில் திரண்டனர். கல்லுாரி நிர்வாகம் ஏற்றுக் கொண்டபடி, ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாணவிகள் கூறுகையில், &'ஆன்லைன் மூலம் 40 சதவீத பாடங்கள் கூட நடத்தவில்லை. ஆன்லைன் தேர்வு என தெரிவித்து விட்டு, திடீரென கடைசி நேரத்தில் நேரடியாக வந்து தேர்வு எழுத கூறினால் எப்படி எழுத முடியும். கல்லுாரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டபடி, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும்&' என கூறினர்.
தொடர்ந்து, கல்லுாரி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில், மாணவிகள் நேரடி தேர்வுக்கு தயாராக கால அவகாசம் அளிக்கவும், மார்ச் 3வது வாரத்தில் தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
