UPDATED : பிப் 11, 2021 12:00 AM
ADDED : பிப் 11, 2021 04:27 PM
சென்னை:
ஒரு நாட்டின் நாணயங்கள், அந்நாட்டின் வரலாற்றைக் கூறுகின்றன, என, சென்னை நாணயவியல் கழகத்தின் செயலர் சங்கரன் ராமன் பேசினார்.
அருங்காட்சியகங்கள் துறை சார்பில், &'சங்க காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரையிலான தென்னிந்திய நாணயங்கள்&' என்ற தலைப்பில், இணையவழி சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சியை, தமிழக அருங்காட்சியகங்கள் துறை கமிஷனர் சண்முகம் துவக்கி வைத்தார்.
சங்கரன் ராமன் பேசியதாவது:
நாணயவில் ஆராய்ச்சி, வரலாற்றுடன் தொடர்புடையது. தென்னிந்திய நாணய வரலாற்றில், தமிழக மன்னர்களின் நாணயங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு.தமிழகத்தில், சங்க கால சேரர் மற்றும் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கிடைத்துள்ளன. சங்க கால சோழர்களின் நாணயங்கள், இதுவரை கிடைக்கவில்லை.
சங்க காலத்தில், அரச சின்னத்துடன் முத்திரையிடப்பட்ட நாணயங்கள் வெளிவந்தன. தொடர்ந்து, செம்பினாலான காசுகளில், மன்னர்களின் பட்டப் பெயர்களும் இடம் பெற்றன.பின், அவர்கள் வெற்றி பெற்ற நாடுகளின் சின்னங்களும் இடம்பெற்றன. பிற்கால தமிழ் மன்னர்களில், சேர, பாண்டிய மன்னர்களின் காசுகளில், தமிழ் இடம் பெற்றது.
பிற்கால சோழர்கள், கங்கை வரை ஆட்சி செய்ததால், தமிழை விடுத்து, பொது மொழியாக நாகரியைப் பயன்படுத்தினர். காசுகளில், பிராமி, நாகரி, கிரந்தம், வட்டெழுத்து என, கால நிலைக்கு ஏற்ப எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.காசுகளில் தாவரங்கள், பூக்கள், விலங்குகளின் படங்கள், தொடர்ந்து வருவதால், தமிழர்கள், இயற்கை சார்ந்த வாழ்வை நேசித்ததை அறிய முடிகிறது.
நாணயங்கள் வெறும் பண்டம் விற்று, வாங்கும் பொருளாக இல்லாமல், அந்தந்த காலத்து பொருளாதாரம், அரசியல், வழிபாட்டு நெறிகள், சமூக சூழல்களை வெளிப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.
