சென்னை மருத்துவ கல்லூரிக்கு இன்று 186வது பிறந்த நாள்!
சென்னை மருத்துவ கல்லூரிக்கு இன்று 186வது பிறந்த நாள்!
UPDATED : பிப் 13, 2021 12:00 AM
ADDED : பிப் 13, 2021 09:25 AM
ஆசியாவின் மருத்துவ வரலாற்றில், மிகப்பெரிய ஆணிவேராக விளங்கி வரும் சென்னை மருத்துவக் கல்லுாரி, 186வது பிறந்த நாளை இன்று கொண்டாட உள்ளது.
தேசத்தின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கி தந்த அக்கல்லுாரி, இந்தியாவின் அடையாள சின்னங்களில் ஒன்றாக பரிணமித்து வருகிறது. ஆசிய கண்டத்தில், சில நுாற்றாண்டுகளுக்கு முன், ஆங்கில மருத்துவத்துக்கும், மருத்துவக் கல்விக்கும் தொடக்கப் புள்ளியாக, சென்னையும், கோல்கட்டாவும் இருந்தன.
கடந்த, 16ம் நுாற்றாண்டில், கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் தடம் பதிக்க துவங்கியபோது, கடல் வழியே நம் நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர்கள், கப்பலில் தங்களுடன் டாக்டர்களையும் அழைத்து வந்தனர்.
கிழக்கிந்திய கம்பெனி
சென்னை வந்த ஆங்கிலேயர்கள் பலர், இங்கேயே தங்கியபோது, நம் நாட்டின் தட்ப வெப்பநிலையை ஏற்க இயலாமல் நோயுற்றனர்.
அவர்களுக்கு, மருத்துவ உதவிகளும், வசதிகளும் தேவைப்பட்டதால், 1664ம் ஆண்டு நவ., 16ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி மருத்துவமனை, வாடகை வீட்டில் துவங்கப்பட்டது.நாளடைவில், அவை துறைமுக மருத்துவமனை, மாநில மருத்துவமனை, மெட்ராஸ் மருத்துவமனை என, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன.சர் எட்வர்ட் விண்டர் என்பவரால் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை, தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, 1772ம் ஆண்டு, கோட்டையில் இருந்து, சென்ட்ரல் பகுதியில் மாற்றப்பட்டது. அது தான், தற்போது ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையாக உள்ளது.
சென்னை மருத்துவக் கல்லுாரியின் பரிணாம வளர்ச்சி குறித்து, அக்கல்லுாரியில் பயின்று, தற்போது, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் துணைவேந்தராக உள்ள டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:
கடந்த, 18ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், சென்னை மருத்துவமனையின் டாக்டர்களாக இருந்த ஆங்கிலேயர்களுக்கு, மருத்துவ உதவி செய்ய சில ஊழியர்கள் தேவைப்பட்டனர். அதற்காக, சிலருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கட்டு போடுவதற்கும், காயங்களுக்கு மருந்து போடுவதற்குமான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன.
இது, ஒரு முறைசாரா மருத்துவக் கல்வியாக இருந்தது.அதன்பின், மருத்துவமனையின் கண்காணிப்பாளராக வில்லியம் மார்டிமர் என்பவர் வந்தார். அவர், மருத்துவ உதவியாளர்களுக்கு உடற் கூறுயியல் தொடர்பான அடிப்படை கல்வி அவசியம் என்பதை உணர்ந்து, வீட்டிலேயே அவர்களுக்கு அதை பயிற்று வித்தார். மேலும், அதை முறைப்படுத்தி, சென்னை மருத்துவ பள்ளி ஒன்று, 1835, பிப்., 13ம் தேதி துவங்கப்பட்டது. அதில், ஐரோப்பியர்களுக்காகவும், இந்தியர்களுக்காகவும் தனித்தனியே இரு வகையான கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.
தரம் உயர்ந்தது
அதை நிறைவு செய்தவர்கள் துணை மருத்துவர்களாக கருதப்பட்டனர். அதற்கான பாடத்திட்டத்தை முதலில் வகுத்த மார்டிமர், கையெழுத்து பிரதியாக அதை எழுதி வைத்து, மாணவர்களுக்கு பயிற்றுவித்தார். அடுத்த சில ஆண்டுகளுக்கு பின், மருத்துவக் கல்விக்கான பாடத்திட்டம், அச்சு வடிவம் பெற்றது. பின், படிப்படியாக பட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, சென்னை பல்கலை தோற்றுவிக்கப்பட்டது. அதன் நீட்சியாக, சென்னை மருத்துவ பள்ளி, கல்லுாரியாக மாற்ற விண்ணப்பிக்கப்பட்டது. அவை ஏற்கப்பட்டு, கடந்த, 1850 அக்., 1ம் தேதி முதல், சென்னை மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்ந்தது. இக்கல்லுாரி, பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு, தேசிய அளவில் மிகப்பெரிய மருத்துவக் கல்வி நிறுவனமாக வேரூன்றி நிற்கிறது. அங்குள்ள புராதன கட்டடங்களும், சரித்திரத்தின் சமகால சாட்சியமாக விளங்கி நிற்கின்றன.
19ம் நுாற்றாண்டு துவக்கத்தில் கட்டப்பட்ட, செங்கோட்டை என அழைக்கப்படும், &'ரெட் போர்ட்&' கட்டடம், உடற்கூறுயியல் துறையாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. தற்போது, அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அதேபோல், சென்னை மருத்துவக் கல்லுாரி வளாகத்துக்குள் இருக்கும் பழமையான கட்டடங்களுள் ஒன்றான கருத்தரங்க கட்டடம், இன்றளவும் கல்லுாரி அலுவலகமாக செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வரலாற்றுப் பின்னணி
இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சென்னை மருத்துவக் கல்லுாரியில் பயின்றவர்களில், பலர் இன்றைய மருத்துவ உலகத்தால் கொண்டாடப்படக்கூடிய ஜாம்பவான்களாக உருவெடுத்துள்ளனர். பிரிட்டன் சர்ஜன் ஜெனரல்கள், இந்திய மருத்துவ வல்லுனர்கள் என, எத்தனையோ பேரின் தலைமையில் பீடு நடை போட்ட சென்னை மருத்துவக் கல்லுாரி, தற்போது அதன் முதல்வர் டாக்டர் தேரணிராஜன் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது.
