UPDATED : மார் 25, 2021 12:00 AM
ADDED : மார் 25, 2021 03:24 PM
புதுச்சேரி:
புதுச்சேரி - ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் இணைந்து, ஆன்லைன் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.
புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும், ஜெர்மனியில் உள்ள கொப்லென்ஸ் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜெர்மனியில் படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை படிப்பு துறையும், கொப்லென்ஸ் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் அலுவலகமும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஈராஸ்மஸ் உதவித்தொகை மூலமாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் எம்.பி.ஏ., மாணவர்கள் ஜெர்மனியின் -கோப்லென்ஸில் முழு நிதியுதவியுடன் படிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குனர் (படிப்புகள்) பாலகிருஷ்ணன், மேலாண்மை பள்ளியின் டீன் சந்திரசேகர ராவ், சர்வதேச உறவுகள் துறையின் டீன் உமா சந்திரசேகரன் மற்றும் கொப்லென்ஸ் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்று பேசினர்.
ஆன்லைன் கருத்தரங்கில் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை படிப்புகள் துறையின் தலைவர் சாருமதி வரவேற்றார். பேராசிரியர் விக்டர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.
