தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 52 பேருக்கு கொரோனா
தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 52 பேருக்கு கொரோனா
UPDATED : மார் 25, 2021 12:00 AM
ADDED : மார் 25, 2021 03:28 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகேயுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் 52 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் அருகேள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், முதலாம் ஆண்டில் 256 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில், விடுதியில் தங்கி படித்த 6 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. அதனையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 46 பேருக்கு தொற்று உறுதியாகியது. தற்போது வரை 52 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 46 பேருக்கு அறிகுறி ஏதும் தென்படவில்லை.
இதனையடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்கள் படிக்கும் வளாகம் மூடப்பட்டதுடன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தூய்மைபடுத்தப்பட்டது. 12 பேர், வீட்டில் தனிமைபடுத்தி கொள்வதாக கூறியதை தொடர்ந்து, அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகி கூறுகையில், மருத்துவமனையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், விடுமுறையில் சொந்த ஊர் சென்று திரும்பியதால், தொற்று ஏற்பட காரணமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
