UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:06 AM
சென்னை:
&'மாநில முதல்வர்கள் கூட்டணியை உருவாக்கி, நீட் தேர்வுக்கு விலக்கு பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி, தமிழக அரசுக்கு பரிந்துரை அளியுங்கள்&' என, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம்:
நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. நீட் தேர்வு என்பது மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கானது அல்ல; தனியார் பயிற்சி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கை. இந்தியாவில் பல மாநிலங்கள், குறிப்பாக, தென் மாநிலங்கள், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
அம்மாநில முதல்வர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு நடத்தி, நீட் தேர்வுக்கு எதிரான கூட்டணியை அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் திறமையான மூத்த வழக்கறிஞரை நியமித்து, உச்ச நீதிமன்றத்தில் வாதாட ஏற்பாடு செய்ய வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் நோக்குடன், உரிய புள்ளி விபரங்களுடன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு ஜனாதிபதி ஒப்புதலை விரைந்து பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
அன்புமணியின் கடிதத்தை, நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஏ.கே.ராஜனிடம், பா.ம.க., செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு நேற்று வழங்கினார்.
