பிளஸ் 1க்கு கட்டாய நன்கொடை அரசு பள்ளிகள் மீது அதிருப்தி
பிளஸ் 1க்கு கட்டாய நன்கொடை அரசு பள்ளிகள் மீது அதிருப்தி
UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:23 AM
சென்னை:
பிளஸ் 1 மற்றும் ஆங்கில வழி மாணவர் சேர்க்கைக்கு, அரசு பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக, பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகம் முழுதும், 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தாத நிலையில், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கு, அரசு பள்ளிகளில் சிறப்பு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது. ஆனால், பிளஸ் 1ல் மாணவர்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை வழங்குவதற்கும், ஆங்கில வழி வகுப்புகளில் இடம் தரவும், அரசு பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் பெயரில் நன்கொடை பெறுவதாகவும், குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை நன்கொடை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். நன்கொடை செலுத்த இயலாதவர்களின் பிள்ளைகளுக்கு, ஆங்கில வழி மற்றும் பிளஸ் 1ல் விருப்பமான பிரிவுகளில் சேர்க்கை வழங்காமல், தலைமை ஆசிரியர்கள் இழுத்தடிப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நன்கொடை தர இயலாதவர்களுக்கு, விருப்பமான பாடப் பிரிவு வழங்காமல், தொழிற்கல்வி அல்லது மாணவர்கள் ஆர்வம் காட்டாத பிரிவுகளை ஒதுக்குவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில், நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக எழுந்த புகாரில், அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
