UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM
ADDED : ஜூலை 14, 2021 01:34 PM
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.,யில் எழும், ஜாதி பாகுபாடு, இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண்ஹால்டர், நேற்று விசாரணை நடத்தினார்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள சங்க பிரதிநிதிகள், ஐ.ஐ.டி., நிர்வாகம் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் அருண்ஹால்டர் பங்கேற்றார். இதில், ஜாதி பாகுபாடு, இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. இதற்கு தீர்வு காண, சில ஆலோசனைகளை வழங்கினார்.
பின், அருண்ஹால்டர் அளித்த பேட்டி:
ஜாதி பாகுபாடு, இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து, அங்குள்ள சங்கம், ஐ.ஐ.டி., நிர்வாகத்திடம் பேசினோம். பல புகார்கள், வெளியில் இருந்தும் வந்தன. ஜாதி பாகுபாடை தடுக்க, சில ஆலோசனை வழங்கி உள்ளோம்.
இட ஒதுக்கீடு குறித்து கேட்டதற்கு, போதிய தகுதி இல்லாததால், இட ஒதுக்கீட்டை நிரப்ப முடிய வில்லை என, ஐ.ஐ.டி., நிர்வாகம் கூறியது.இதுகுறித்து, ஒரு மாதத்தில் அறிக்கை கேட்டுள்ளோம். அதன் பின், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆணையம் முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.
