UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM
ADDED : ஜூலை 15, 2021 06:43 PM
சென்னை:
&'ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், ஆயுள் முழுதும் செல்லத்தக்கது என, ஆணை வெளியிட வேண்டும்&' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, மாணவர்களுக்கான அடிப்படை கல்வி மற்றும் ஆசிரியர்களின் கல்வித் தகுதிகளில், பல்வேறு விதிகள் ஏற்படுத்தப் பட்டு உள்ளன. அதில் ஒன்றாக, அனைத்து மாநிலங்களிலும், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கான சான்றிதழ், ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது. அதற்குள் பணியில் சேராதவர்கள், மீண்டும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி இருந்தது. கொரோனா தொற்று நோய் காரணமாக, &'ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ், ஆயுள் முழுதும் செல்லும். &'ஏழு ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால், தமிழக பள்ளிக்கல்வித் துறை, எவ்விதமான ஆணையையும் வெளியிடவில்லை. முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ், ஆயுள் முழுதும் செல்லத்தக்கது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
