UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM
ADDED : ஜூலை 17, 2021 08:53 AM
பல்லடம் அருகே, கணபதிபாளையம் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் களப்பணியாற்றி, மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியை சுதா கூறியதாவது:
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். புதுமையான கற்பித்தல் வழிமுறை, மாணவர் தனித்திறன் மேம்பாட்டு வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பள்ளியில் உள்ளன. அனைத்து சிறப்புகளையும் உணர்ந்து, அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு சேர்கின்றனர். நடப்பு ஆண்டு, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.
தமிழ், மற்றும் ஆங்கில வழி என, 1 முதல் 5ம் வகுப்பு வரை, மொத்தம், 16 பிரிவுகள் உள்ளன. பள்ளியில், 11 வகுப்பறை கட்டடங்கள் நிலையில், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்களும் அதிகம் பணியமர்த்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு, சுதா கூறினார்.
இப்பள்ளியில், கடந்த, 2017--18ல், 478, 2018--19ல், 487, 2019--20ல், 530, மற்றும் 2020-21ல், 584 ஆகவும் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. இக்கல்வியாண்டில், 670ஆக அதிகரித்துள்ளது.
