UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 12:37 PM
பக்க விளைவுகள் காரணமாக, அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட சில மருந்துகள் மற்ற வடிவங்களில் இன்னமும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதால், நாட்டில் மருத்துவ ஆய்வு நன்முறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும், என்று சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் கூறினார்.
அமெரிக்காவின் மியாமி பல்கலைக் கழக மருத்துவ ஆய்வில் நன்முறைகள் உருவாக்கும் கல்வி திட்டத்திற்கான தெற்காசிய மையம் ஒன்றை போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு பல்கலைக் கழகங்களும் நேற்று கையெழுத் திட்டன. ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகம் சார்பில், ஆய்வுத்துறை இணைவேந்தர் தியாகராஜனும், மியாமி பல்கலைக் கழகத்தின் ஆய்வுக் கல்வி இயக்குனர் பால் பிரான்ஸ்வேகர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, மருத்துவ ஆய்வுக் கல்வி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் ராமச்சந்திரா பல்கலைக் கழக துணைவேந்தர் ரங்கசாமி வரவேற்றார். காசநோய் ஆய்வு மைய இயக்குனர் பேராசிரியர் குமாரசாமி பேசுகையில், வெளிநாட்டு மருந்து நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுகள் இந்தியா போன்ற நாடுகளில் நடத்தப் படுவது வெகுவாக உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த ஆய்வுகள் மிக உயர்ந்த நன்முறைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பது குறித்த கவலையும் அதிகரித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆய்வு சங்கம், இதுபற்றி வெளியிட்டுள்ள வழிகாட்டி உத்தரவுகள் உலகத்தர நன்முறைகளை உள்ளடக்கியுள்ளது. அவற்றை நோயாளிகள் சார்ந்த மருத்துவ ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்கும் வகையில் கல்வியும், பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும், என்றார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் பேசுகையில், இந்தியாவில், பரவலாக பலவகை நோய்கள் உள்ளன. இந்த நோய்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க, விரைவாக பயனளிக்கக் கூடிய மருந்துகளை கண்டறிய வேண்டும். இதற்கு, அவசர ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளது.
நோயாளிகள் சார்ந்த மருத்துவ ஆய்வுகளுக்கும், மருத்துவ நன்முறை பழக்கங்களுக்கும் சில ஒவ்வாமைகள் உள்ளன. அமெரிக்காவில் ஆய்வுகளுக்கு பின் ஒப்புதல் பெற்ற 100க்கும் மேற்பட்ட மருந்துகள், பக்க விளைவுகள் காரணமாக விலக்கப் பட்டன. அவைகளில் சில விரைவு ஒப்புதல் முறையில் அங்கீகரிக்கப் பட்டவை.
அமெரிக்காவில் இவ்வாறு தடை செய்யப்பட்ட சில மருந்துகள் மற்ற வடிவங்களில் இன்னமும் இந்தியாவில், புழக்கத்தில் உள்ளன. ஆகவே, மருத்துவ ஆய்வு நன்முறைகள் இந்தியாவில் கடுமையாக பின்பற்ற வேண்டும்,&' என்றார். மியாமி பல்கலைக் கழக ஆய்வு கல்வி இயக்குனர் பிரான்ஸ்வேகர் பேசுகையில், மக்களிடம் மதிப்பை இழக்காமல் இருக்க மருத்துவ ஆய்வுகள் மிக உயர்ந்த நன்முறைகளுடன் இருக்க வேண்டும். மியாமி பல்கலைக் கழகத்தில் சி.ஐ.டி.ஐ., அமைப்பு, உலகம் முழுவதும் உள்ள 1,300 அமைப் புக்களோடு இணைந்து செயல்படுகிறது. அதை போல ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படும் மையமும் தெற்காசிய பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு அமைப்புக்களோடு இணைந்து செயல்படும், என்றார்.
ராமச்சந்திரா பல்கலைக் கழக ஆய்வுத்துறை இணைவேந்தர் தியாகராஜன் பேசுகையில், வரும் 2010ம் ஆண்டில், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வுகளுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்க நேரிடும். இந்தியாவில், 150 அமைப்பினர் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, மருத்துவ ஆய்வுகளை செய்து வருகின்றனர் என்றார். கருத்தரங்க மலரை இதய மருத்துவத் துறை தலைவர் தணிகாசலம் வெளியிட்டார். கருத்தரங்கில் பல்கலைக் கழக வேந்தர் வெங்கடாச்சலம், டாக்டர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமெரிக்கா, இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
