வெப்பநிலை உயர்வால் பாதிப்பு: துணைவேந்தர் முருகேச பூபதி தகவல்
வெப்பநிலை உயர்வால் பாதிப்பு: துணைவேந்தர் முருகேச பூபதி தகவல்
UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 05:26 PM
கோவை: பூமியில் வெப்பநிலை உயர்வால், உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், காலநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கம் குறித்த கருத்தரங்கு பல்கலையில் நேற்று (நவ. 25ம் தேதி) நடந்தது. மண், பயிர் மேலாண்மை மைய இயக்குநர் ஜெயராமன் வரவேற்றார்.
துணைவேந்தர் முருகேச பூபதி பேசியதாவது: காலநிலை பற்றிய ஆய்வுக்காக, இப்பல்கலையில் கட்டுப்பாடுஅறை துவக்கப்பட்டுள்ளது. இங்கு, காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தியில் ஏற்படும் தாக்கம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். அதிக அளவு வாகன பெருக்கம், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்றவற்றால் காற்றில் கரியமில வாயுவின் அளவுஅதிகரித்து வருகிறது. இதனால், வெப்பநிலை அதிகரித்து, 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஏற்படும் மாற்றங்கள் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப்படும்.
உணவு உற்பத்தி பாதிக்கும்: பருவமழை தாமதம், உயரும் வெப்பநிலை ஆகியவை 2100ல் எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்யப்படும். காற்று மண்டலத்தில் ஒவ்வொரு டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உயர உயர கோதுமை உற்பத்தி, 50 லட்சம் டன் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
சர்வதேச உணவு, வேளாண்மை நிறுவனம், ‘இந்தியநாட்டின் காலநிலை மாற்றத்தால், மானாவாரி உணவு தானிய உற்பத்தி, 12.5 கோடி டன் அளவு குறைவு ஏற்படும்’ என கூறியுள்ளது. காலநிலை மாற்றத்தால், எதிர்காலத்தில் உள்நாட்டு உற்பத்தி, ஒன்பது முதல் 13 சதவீதம் வரை இழப்பு ஏற்படும்.
தற்போது ஏற்பட்டுள்ள பிலிப்பைன்ஸ்சில் வெள்ளம், இந்தியாவில் பருவமழை தாமதம், ஆஸ்திரேலியாவில் வறட்சி போன்றவையால், இந்தியாவில் நெல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்புகளை தவிர்க்க, நார்வே நாட்டின் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி, ஹவாய் நாட்டில் உள்ள சர்வதேச பசிபிக் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இப்பல்கலை இணைந்து செயல்படும்.
நெல் உற்பத்திக்கு சிக்கல்?: கால நிலை மாற்றத்தால் காவிரி படுகையில் நெல் உற்பத்தியில்ஏற்படும் மாற்றத்தின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் பயன்பாட்டு திறன், பயிர் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நெல் சாகுபடி முறைகளை ஆய்வு செய்தல், பயிர் உற்பத்தி மாதிரிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெல் சாகுபடியால் ஏற்படும் மீதேன் வாயு உற்பத்தியை குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். புதிய உழவியல் முறையை ஆராய்ந்து, நெல் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு முருகேச பூபதி பேசினார்.
நார்வே தூதரக ஆலோசகர் இங்கர் சான்ங்னஸ் பேசுகையில்,“கிளைமாரைஸ் ஆய்வு திட்டம், முதல் கட்டமாக காவிரி ஆற்றுப்படுகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக காவிரி ஆற்றுப்படுகை, கிருஷ்ணா ஆற்றுப்படுகை போன்றவைகளுக்கு நார்வே நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண் விவசாயிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்,”என்றார்.
நார்வே நாட்டின் பையோபோர்க்ஸ் நிறுவனத்தை சார்ந்த நாகோத்து உதயசேகர், காவிரி படுகை வளர்ச்சி ஆய்வு நிறுவன தலைவர் ரங்கநாதன், நீர் ஆதார நிறுவன முதன்மை இன்ஜினியர் மூர்த்தி, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் கீதாலட்சுமி உட்பட பலர் பேசினர்.
