UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 05:31 PM
கோவை: “மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி, வேலை தேடுவதாக இல்லாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்,” என்று கோவை வேளாண் பல்கலை பதிவாளர் சுப்பையன் கூறினார்.
‘எதிர்கால கல்வி’ எனும் இரண்டு நாள் கருத்தரங்கம், கோவை வேளாண் பல்கலையில் நடந்தது. ‘தனுஷ் எஜூகேஷனல்ஸ்’ நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், தமிழ்நாடு அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திரபாபு எழுதிய ‘பீ ஆம்பிஷியஸ்’ எனும் புத்தகம் வெளியிடப்பட்டது.
கருத்தரங்கில் வேளாண் பல்கலை பதிவாளர் சுப்பையன் பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உலகம் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதில் சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்படுத்துவதில் கல்வியின் பங்கு முக்கியம். கல்வி என்பது துõண்டுவதாக இருக்க வேண்டும். இதற்கு தேவையான திறன், அறிவு, திறமை ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும்.
பாடங்களை சும்மா மனப்பாடம் செய்வதாக இல்லாமல், குழந்தைகள், இளைஞர்களின் உள்ளே மறைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவதாக பாடங்கள் அமைந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி, வேலை தேடுவதாக இல்லாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக, புதுமைகளை கற்பிப்பதாக, படைப்பாற்றல் திறனையும் தொழில் முனையும் திறனையும் ஊக்குவிப்பதாக கல்வி அமைய வேண்டும். இவ்வாறு, சுப்பையன் பேசினார்.
அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திரபாபு, சுரா புத்தக வெளியீட்டு நிறுவன நிர்வாகி சுப்புராஜ், கே.ஜி. மருத்துவமனை சேர்மன் பக்தவத்சலம், பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
