UPDATED : நவ 30, 2009 12:00 AM
ADDED : நவ 30, 2009 05:48 PM
மதுரை: மத்திய அரசின் என்.ஐ.டி., (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) நிறுவனங்களில் சேர்வதற்கு அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு 2010 ஏப்ரல் 25 ல் நடக்க உள்ளது.
இதில் பெறப்படும் மதிப்பெண்கள் என்.ஐ.டி., மட்டுமின்றி ஐ.ஐ.ஐ.டி., நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு நுழையவும் பயன்படும். இத்தேர்வு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களை தயார்படுத்துவதற்காகவும் தினமலர் சார்பில் நேற்று மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மூன்று மணி நேரம் மாதிரித்தேர்வு நடந்தது.
தேர்வில் பங்கேற்ற பின் மாணவர்கள் சிலர் அளித்த பேட்டி: : பாலாஜி பிரபு (லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்) : உண்மையான ஏ.ஐ.இ.இ.இ., தேர்வுக்கான முன்னோட்டமாக இருந்தது. கேள்விகள் எப்படி வரும் என தெரிந்து கொண்டோம். தேர்வு பயத்தை குறைத்தது.
கார்த்திகேயன் (டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி, மதுரை) : நல்ல பயிற்சியாக அமைந்தது. உபயோகமான தேர்வு இது. ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புஷ்பலீலா (காமராஜ் மெட்ரிக் பள்ளி, சோழவந்தான்) : வழக்கம் போல படித்துவிட்டு வந்தேன். இதில் அதிக மதிப்பெண் பெறாவிட்டாலும், தேர்வெழுதும் முறை, வினாத்தாள்களைத் தெரிந்து கொண்டேன்.
சஞ்சய் (கேந்திரிய வித்யாலயா, மதுரை) : உண்மையானத் தேர்வுக்கு படிப்பதை போல, இத்தேர்வுக்கும் தயார் செய்து படித்தேன். ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு எப்படி இருக்குமென புரிந்து கொள்ள முடிந்தது.
ஆர்த்தி (மகாத்மா பள்ளி, மதுரை) : இந்த பொறியியல் மாதிரித் தேர்வைப் போல, ஐ.ஐ.டி., எய்ம்ஸ் மாதிரித் தேர்வுகளையும் நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
சுப்புராம்(லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்): நேரத்தை கணக்கிட்டு எழுத இது அருமையான பயிற்சி. தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று இதன்மூலம் தெரிந்து கொண்டேன்.
தேர்வுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய பிர்லியண்ட் டூட்டோரியல்ஸ் மதுரை பகுதி மேலாளர் பி.சிவகுமார் கூறுகையில்,“மாணவர்கள் சுயபரிசோதனை செய்ய இந்த தேர்வு உதவியது. தினமலர் இதழின் இந்த முயற்சி மூலம் ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு தொடர்பாக தென்மாவட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பெறுவர். ஏப்ரலில் நடக்கும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மதுரை பேலஸ் ரோடு சிண்டிகேட் வங்கி கிளையில் டிச.,1 முதல் 31 வரை விற்கப்படுகின்றன,” என்றார்.
தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிர்லியண்ட் டூட்டோரியல்ஸ் சார்பில் பிளஸ் 2 மாநில பாடத்திட்ட ஒரு மதிப்பெண் வினா-விடை, 2009 ஆண்டு ஏ.ஐ.இ.இ.இ., கேள்வி மற்றும் விடை அடங்கிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.மதிப்பெண் விபரம் டிச.,6 தினமலர் இதழில் வெளியாகும்.
